

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை பருகியதால் 7 பேர் இறந்ததாக மாநகர் மேயர் அறிவித்த நிலையில் 14 பேர் வரை இறந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் ஒரு பொதுக் கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளது. இந்த தண்ணீரை குடித்த பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியது. ம.பி. முதல்வர் மோகன் யாதவ் நேற்று முன்தினம் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தப் பிரச்சினையில் 2-3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 212 பேரில் 4 பேர் இறந்தனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 62 பேர் சிகிச்சையில் உள்ளனர்” என்றார்.
இதற்கு அடுத்த சில மணி நேரத்தில் மாநகர மேயர் புஷ்யமித்ரா பார்கவா, நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி 7 பேர் இறந்ததாக உறுதி செய்தார். இந்நிலையில் இத்துயர சம்பவத்தில் 6 மாத குழந்தை உட்பட இதுவரை 14 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் மக்கள் நேற்று தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநில அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா நேற்று கூறுகையில், “இறப்பு எண்ணிக்கை மாறுபாடு குறித்து நாங்கள் சரிபார்ப்போம். மக்கள் கூறுவது சரியாக இருந்தால் முதல்வர் அறிவித்தவாறு அவர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்குவோம்” என்றார்.
இதற்கிடையில் பாகீரத்புராவில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கிஉள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.