Last Updated : 18 Aug, 2018 05:19 PM

 

Published : 18 Aug 2018 05:19 PM
Last Updated : 18 Aug 2018 05:19 PM

மீண்டும் மிரட்டும் மழை; கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கேரளாவின் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், அங்கு ரெட் அலர்ட் கொடுத்து இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) எச்சரித்துள்ளது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று ஒரேநாளில் மட்டும் 22 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 196-ஆக அதிகரித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 10 நாட்களாக கொட்டித் தீர்த்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றன. மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து 3 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 196 ஆகவும், ஒட்டுமொத்தமாக 340-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மழை குறைந்ததால், மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தேசியப் பேரிடர் மீட்புப் பணித்துறை, விமானப்படை, கடற்படை, ராணுவம், தீயணைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே 11 மாவட்டங்களில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், ''திருவனந்தபுரம், கொல்லம், காசர்கோடு மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் தொடர்ந்து மிகக் கனமழை நீடிக்கும். வடமேற்கு வங்கக் கடல் அருகே அடுக்க 24 மணிநேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், 11 மாவட்டங்களிலுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, பத்தினம்திட்டா, செங்கனூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இன்று 22 பேர் பலியாகியுள்ளனர்.

 

ஆலுவா, சாலக்குடி, செங்கனூர், ஆலப்புழா, பத்தினம்திட்டா மாவட்டங்கள் கடும் வெள்ள சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடந்த மே மாதம் 29-ம் தேதியில் இருந்து இதுவரை மழை வெள்ளத்துக்கு மட்டும் 357 பேர் பலியாகியுள்ளனர். 3.53 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 ஆயிரம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலப்புழா மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஏ.பி. சுரேந்திரன் கூறுகையில், ''இன்று மீட்புப் பணிகள் முழு வேகத்தில் நடக்கின்றன. ஹெலிகாப்டர், படகுகள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி இருக்கும் அனைத்து மக்களையும் விரைவில் மீட்போம் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, வயநாடு ஆகிய பகுதிகளில் மழை குறைந்து, தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. ஏராளமானோர் முகாம்களில் இருந்து வீட்டுக்குத் திரும்ப தயாராகி வருகின்றனர்.

எர்ணாகுளம், திருச்சூர் இடையிலான ரயில் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. ஆதலால், நாகர்கோயில் மார்க்கமாக இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சூர்-பாலக்காடு இடையே தடைபட்டிருந்த சாலைப் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x