Last Updated : 21 Aug, 2018 05:44 PM

 

Published : 21 Aug 2018 05:44 PM
Last Updated : 21 Aug 2018 05:44 PM

கேரளாவுக்கு ரூ.2600 கோடி சிறப்பு நிதித் தொகுப்பு தேவை: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கோரிக்கை

கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 223 பேர் பலியாகியுள்ளனர், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனர். ஆதலால், மத்திய அரசிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 600 கோடி சிறப்பு நிதித் தொகுப்பு தேவை என்று முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை கொட்டித் தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 223க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் மீட்புப் பணியில் முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்பு படையினர், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் இருப்பதால், மீட்புப் பணியில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநிலத்தின் வெள்ளச்சேதம், அடுத்து செய்யவேண்டிய புனரமைப்பு, கட்டமைப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்க இன்று கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்துக்குப் பின், முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்தால் இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. 224-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கிறார்கள்.

13 மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை இழந்துள்ளனர், அடிப்படைக் கட்டமைப்புகள் சிதைந்துள்ளன. மற்ற மாநில அரசுகள், தனிநபர்கள், குழந்தைகள், நிறுவனங்கள் என நிதியுதவி அளித்து வருகின்றன. மாநிலம் சுயமாக ரூ.10 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு நிதி திரட்ட முடியும்.

மாநிலத்தின் வெள்ளச் சேதங்களை இரு மத்திய அமைச்சர்களும், பிரதமரும் பார்வையிட்ட பின் ரூ. 680 கோடி நிதி உதவி அறிவித்துள்ளனர். ஆனால், இந்த நிதி போதாது. சிறப்பு நிதித்தொகுப்பாக மாநிலத்தின் கட்டமைப்புப் பணிக்காக ரூ.2,600 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

மாநிலத்தின் மறுகட்டமைப்புப் பணிக்காக ஐக்கிய அமீரக நாடு ரூ.700 கோடியை அளிப்பதாக உறுதியளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜயத் அல் நாஹ்யன் பிரதமர் மோடியிடம் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

மேலும், கேரள மாநிலத்தில் மக்கள் பெற்றுள்ள வேளாண் கடனை ஒரு ஆண்டுக்குப் பின் மீண்டும் செலுத்துமாறு வங்கிக்கூட்டமைப்பு குழு முடிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் 3,200 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10.78 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள். 2.12 லட்சம் பெண்கள் உள்ளனர்.

மழையின் வேகம் கடந்த 2 நாட்களாக படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால், எர்ணாகுளம், திருச்சூர், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. வீடுகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

ரயில்வே சேவை பெரும்பாலான இடங்களில் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், வீடுகளில் இருக்கும் கழிவுகளையும், சேறுகளையும் அகற்றி மீண்டும் மக்கள் குடியேறுவது என்பது மிகப்பெரிய சவாலான பணியாக இருக்கிறது.

நூற்றாண்டிலேயே இல்லாத மழையால் ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகள், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக்கூட்ட ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x