Last Updated : 25 Aug, 2018 07:39 PM

 

Published : 25 Aug 2018 07:39 PM
Last Updated : 25 Aug 2018 07:39 PM

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திக்க 3 குழு: தமிழகத்திலிருந்து ப.சிதம்பரத்துக்கு மட்டும் இடமளித்த ராகுல் காந்தி

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி 3 குழுக்களை அமைத்துள்ளது. இந்த 3 குழுக்களிலும் வழக்கமான மூத்த தலைவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர், அதிலும் ஒரே ஒரு தமிழர் ப.சிதம்பரத்துக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தலைவர்களான மணிசங்கர் அய்யர், நீலகிரி பிரபு, சுதர்சன நாச்சியப்பன், இ.வி.கேஎஸ். இளங்கோவன், மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு, பீட்டர் அல்போன்ஸ், மாணிக் தாக்கூர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீவிர முனைப்புடன் பல்வேறு விவகாரங்களை எழுப்பி விமர்சித்து வருகிறது. பாஜகவை எதிர்த்துத் தேர்தல் களத்தில் நிற்கவும் வலுவான, மதச்சார்பில்லாத கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

அதேபோல, பாஜகவும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அதன் தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி காய்களை நகர்த்தி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் புதிய கூட்டணியை அமைத்து வெற்றி வெறி திட்டங்களை தீட்டி வருகிறது பாஜக. இதற்காக, பாஜக தலைவர் அமித் ஷா ஒவ்வொரு மாநிலமாகச் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இதனால் இரு தேசிய கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குத் தயாராகும் முயற்சியாக அதன் தலைவர் ராகுல் காந்தி 3 முக்கியக் குழுக்களை அமைத்துள்ளார். 9 பேர் கொண்ட தேர்தல் மையக் குழு, 19பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு, 13 பேர் கொண்ட விளம்பரக்குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 3 குழுக்களிலும் இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், தேர்தல் அறிக்கையில் புதுரத்தம் பாய்ச்சப்படும், புத்தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம் போல் மூத்த தலைவர்கள் நிரம்பிய குழுவாகவே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.

இந்த மூன்று குழுவிலும் தமிழகத்தில் இருந்து மூத்த தலைவர் ப.சிதம்பரம் மட்டுமே இடம் பெற்றுள்ளார். மற்ற தலைவர்களான சுதர்ச்சன நாச்சியப்பன், மணிசங்கர் அய்யர், நீலகிரி பிரிவு, பீட்டர் அல்போன்ஸ், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிஉள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்படவில்லை

9 பேர் கொண்ட தேர்தல் மையக்குழுவில், ஏ.கே.அந்தோனி, குலாம் நபி ஆசாத், பி.சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் உள்ளனர்.

19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவில், மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இதில் புதிய முகங்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் ஹரியானா முதல்வர் பூபேந்திர்சிங் ஹூடா, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், சஷி தரூர், குமாரி செல்ஜா, மேகாலயா முன்னாள் முதல்வர் முகல் சங்மா, தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பஞ்சாப் நிதிஅமைச்சர் மன்பிரீத் பாதல், கட்சியின் மகளிர் அணித் தலைவர் சுஷ்மிதா தேவ், மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் கவுடா, கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் துறையின் தலைவர் தம்ராஜ்வாஜ் சாஹு, பிந்து கிருஷ்ணன், ரகுவீர் மீனா, பாலச்சந்திர முங்கேகர், மீனாட்சி நடராஜன், ரஜினி பாட்டீல், சாம் பிட்ரோடா, சச்சின் ராவ், லலிதீஷ் திரிபாதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

விளம்பரத்துக்கான 13 பேர் கொண்ட குழுவில், ரன்தீப் சுர்ஜேவாலா, முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, ராஜீவ் சுக்லா, பக்த சரண் தாஸ், பிரவீன் சக்ரவர்த்தி, மிலிந்த் தியோரா, குமார் கேத்தார், பவன் கேரா, வி.டி.சத்தீசன், ஜெய்வீர் ஷெர்கில், சமூகஊடகப்பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா, முன்னாள் எம்.பி. பிரமோத் திவாரி ஆகியோர் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x