

தமிழக நகர்புறங்களில் குடியிருப்பு வீடுகளின் பற்றாக்குறை எண்ணிக்கை 12 லட்சம் ஆக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 2022-க்குள் 'அனைருக்கும் வீடு' திட்டத்திற்காக மத்திய வீடு மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு துறை அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறை 1 கோடியே 87 லட்சமாக உள்ளது என்று தொழில்நுட்ப குழு தெரிவிக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஜவஹர்லால் நேரு நகர்புற புனரமைப்பு இயக்கம், ராஜீவ் வீட்டு வசதி திட்டம், கூட்டு மலிவு வீடு திட்டம் ஆகிய திட்டங்கள் கீழ் 2,20,741 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது.
நகர்புற வீடு பற்றாக்குறையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் அதிகபடியாக 30 லட்சம் பற்றாக்குறை உள்ளது. மேலும், மகாராஷ்டாவில் 19 லட்சம், மேற்கு வங்காளத்தில் 13 லட்சம், ஆந்திர பிரதேசத்தில் (பிரிப்பதற்கு முன்) 13 லட்சம், தமிழ்நாட்டில் 12 லட்சம், பிஹாரில் 12 லட்சம், ராஜஸ்தானில் 11 லட்சம், கர்நாடகாவில் 10 லட்சம், குஜராத்தில் 9 லட்சம் மற்றும் ஜார்கண்டில் 6 லட்சம் பற்றாக்குறை உள்ளது.
மேலும், நாட்டில் உள்ள 70.63 சதவீதம் நகர்புற வீடுகளுக்கு வீட்டின் உள்ளே அல்லது அருகிலோ அல்லது தொலைவிலோ குழாய் நீர் வசதி உள்ளது. 20.76 சதவீதம் வீடுகள் குழாய் கிணறு, கை பம்ப் மூலம் தண்ணீர் பெறுகின்றனர்.