Published : 21 Aug 2018 01:18 PM
Last Updated : 21 Aug 2018 01:18 PM

மழை, வெள்ளத்தால் தவிக்கும் கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி: உதவிக்கரம் நீட்டும் ஐக்கிய அரபு அமீரகம்

பலத்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்ய ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது. இயற்கை சீற்றத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள கேரள மக்களின் துயரத்தில் பங்கு கொள்வதாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகு கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப் படுகின்றன. மத்திய அரசு ரூ.600 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. பல மாநிலங்களும் நிதியுதவி அளித்துள்ளன.

மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8,000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர் பயிர்கள் அழுகியுள்ளன. 134 பாலங்கள் இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை சந்தித்திராத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மீட்பு பணிகள் ஏறக்குறைய முடிவடையும் சூழல் உள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் 95 சதவீதம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தை மறு உருவாக்கம் செய்வது தான் தற்போதுள்ள சவால்.

பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்யப்பட உள்ளது. அந்நாடு துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஐக்கிய அரசு அமீரகத்தில் ஏராளமான கேரள மக்கள் பணி புரிந்து வருகின்றனர்.

அவர்களின் மன வேதனையில் தாங்களும் பங்கு பெறுவதாக அவர் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த உதவிக்கு கேரளாவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய அரசு அமீரக துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு கேரள மக்கள் ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. இயற்கை சீற்றத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள கேரள மக்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய அரசு அமீரகம் மேற்கொள்ளும்’’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x