Published : 16 Aug 2018 10:01 AM
Last Updated : 16 Aug 2018 10:01 AM

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பாஜக மூத்த தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் வாஜய்பாய் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்ப்டடு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்காக, கடந்த 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

நீரிழிவு நோயாளியான வாஜ்பாய்க்கு தற்போது ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.அவர் கடந்த 2 நாட்களாக செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சுவாசித்து வருகிறார்.

பிரதமர் மோடி நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மத்திய அமைச்சர்கள், பாஜகவினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கடந்த 24 மணிநேரத்தில் மிக மோசமடைந்துள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருகிறார். அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். வாஜ்பாயிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x