Last Updated : 22 Aug, 2018 09:59 AM

Published : 22 Aug 2018 09:59 AM
Last Updated : 22 Aug 2018 09:59 AM

வாஜ்பாய் லாகூர் பயணம்: சொல்லப்படாத உண்மைகள்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுவிட்ட இந்நேரத்தில், இதுவரை சொல்லியிராத உண்மைகளைச் சொல்லியே தீரவேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் வாஜ்பாயும் நவாஸ் ஷெரீபும் துணிச்சலாகவும் நாடக பாணியிலும் மேற்கொண்ட சமரச முயற்சிகளையும் அதை பாகிஸ்தான் ராணுவம் முறியடித்ததையும் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். இந்நாடகத்தில் தொடர்புள்ள வாஜ்பாய் சமீபத்தில் மறைந்துவிட்டார்.

நவாஸ் ஷெரீப், ராவல்பிண்டி சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். மூன்றாவது கதாபாத்திரம் அடியேன்தான். தேசிய நலனில் எழுதும் இக் கட்டுரையை ஒருவிதமான ‘ஒப்புதல் வாக்குமூலமாகவும்’ கருதலாம்.

1997-ல் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் மீண்டும் பதவிக்கு வந்தார். சில நாள்களுக்குப் பிறகு வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு டெல்லியில் பதவியேற்றது.  வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்தது; இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானும் சகாய் பாலைவனத்தில் ஒரு குண்டை வெடித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் உறைநிலைக்குச் சென்றது.

1998-ன் இறுதிக் காலாண்டில் இரு நாடுகளிலும் பொறுமையின்மை தோன்றியது. இரு தலைவர்களும் உறவை விரும்பினர். இந்தத் தருணத்தில்தான் பாகிஸ்தானிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. பேட்டி தருமாறு நான் விடுத்த வேண்டுகோளுக்கு பதில் அளித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அனுப்பிய கடிதம் அது.

கடிதத்தைப் படித்ததும் நவாஸின் அலுவலகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். ‘பேட்டிக்காக பாகிஸ்தானுக்கு வாங்களேன்’ என்று அழைத்தார் நவாஸ். ‘வந்து என்ன பயன், இரு பிரதமர்களாலும் சமாதானமாகப் போக முடியவில்லையே?’ என்று கேட்டேன். ‘பெரிய உடன்பாடுகள் வேண்டாம், டெல்லி-லாகூர் பஸ்ஸைக்கூட அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்களே’ என்று கேலியாகக் கேட்டேன்.

‘பஸ்ஸை அனுமதிப்போம் என்று பேட்டியில் பதில் கூறுங்கள், எங்கள் பிரதமரையும் பாகிஸ்தானுக்கு வர அழைப்புவிடுங்கள்’ என்றேன். நவாஸ் உடனே இந்த யோசனையைப் பரிசீலித்ததுடன், அப்படி அழைக்கத் தயாரானார். “சரி நான் அழைக்கிறேன், வாஜ்பாய் வர மறுத்துவிட்டால் எனக்கு அவமானமாகிவிடுமே” என்று தயங்கினார். “சரி, நான் இங்கே கேட்டுப் பார்க்கிறேன்” என்று பதில் அளித்தேன்.

பிறகு வாஜ்பாயிடமும் பேசினேன். அவருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. ‘பாகிஸ்தானுக்குப் போய் பேட்டி எடுத்துவந்துவிட்டு என்னைப் பாருங்கள், அதுவரை பேட்டியைப் பிரசுரிக்காதீர்கள்’ என்று நிபந்தனை விதித்தார். லாகூரில் நவாஸ் வீட்டில் பேட்டி எடுத்தேன்.

“லாகூருக்கு பஸ் அனுப்புங்கள், அதில் வாஜ்பாய் முதலில் வரட்டும், அவரை நான் வரவேற்பேன்” என்று அழைப்பு விடுத்தார் நவாஸ். டெல்லி திரும்பியதும் வாஜ்பாயிடம் இதைக் கூறினேன். பேட்டியை மேலும் ஒரு நாள் தாமதமாகப் பிரசுரிக்குமாறு கூறினார் வாஜ்பாய்.

லக்னோ நகருக்குத் தான் செல்லும் நாளில் அந்தப் பேட்டி பிரசுரமாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிர்பார்த்தபடியே ஒரு நிருபர், நவாஸின் அந்த அழைப்பு குறித்து வாஜ்பாயிடம் கேள்வி கேட்டார். வெளியுறவுத் துறை முட்டுக்கட்டை போடுவதற்குள், ‘பாகிஸ்தானுக்குச் செல்லத் தயார்’ என்று அறிவித்துவிட்டார் வாஜ்பாய்.

இவ்வாறு சில நாடகங்களுக்குப் பிறகு லாகூர் பஸ் பயணம் சாத்தியமானது. வாஜ்பாய்க்கு வணக்கம் செலுத்த முடியாது என்று ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் முஷாரப் மறுத்தார். பாகிஸ்தானத்தின் மிகவும் புகழ் பெற்ற மினார் வரையில் நடந்து சென்ற வாஜ்பாய், ‘பாகிஸ்தானில் வளமான – நிலையான மக்களாட்சி நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்’ என்று அறிவித்தார்.

இரு பிரதமர்களும் சமாதான முயற்சிகளில் தீவிரமாக இருந்தபோது, அவர்களுக்கே தெரியாமல் பாகிஸ்தான் ராணுவம் கார்கிலில் ஊடுருவி நிலைகளை ஏற்படுத்தத் தொடங்கியது. மே மத்தியவாக்கில் முதல் மோதல் ஏற்பட்டது. இந்திய விமானப்படையின் 2 மிக் ரக போர் விமானங்களை தோளில் வைத்து சுடும் ஏவுகணைக் குண்டுகளால் வீழ்த்தினர் பாகிஸ்தானியர்கள்.

மும்பையில் நான் தங்கியிருந்த அறையின் தொலைபேசி காலை 6.30 மணிக்கெல்லாம் அலறியது. பிரதமர் வாஜ்பாய் பேச விரும்புகிறார் என்ற தகவல் கிடைத்தது. ‘என்ன உங்க நண்பர் இப்படிச் செய்கிறார்’ என்று கேட்டு, நடந்ததைக் கூறினார்.  நான் உடனே லாகூருக்குத் தொடர்பு கொண்டேன். அன்றிரவு நவாஸ் பேசினார். வாஜ்பாயைப் போலவே அவரும் இதை யார், எதற்காகச் செய்கிறார்கள் என்று புரியாமல் தவித்தார். வாஜ்பாயுடன் பேச விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

முஷாரப்பும் அவருடைய அடுத்த நிலை தளபதியும்தான் கார்கில் ஊடுருவலைத் திட்டமிட்டனர் என்பதை அவர்களுடைய உரையாடல் ஒலிப்பதிவிலிருந்து தெரிய வந்திருப்பதாக வாஜ்பாயும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவும் எனக்குத் தெரிவித்தனர்.

மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்று இத்தகவலை நவாஸிடம் நேரில் தெரிவிக்க முடியுமா என்று கேட்டனர். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். பிறகு ஆர்.கே. மிஸ்ரா என்ற இன்னொரு பத்திரிகையாளர் இதைச் செய்தார். கார்கில் போரில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார் வாஜ்பாய்.

அதன் பிறகு ராணுவத்துக்கும் நவாஸுக்கும் உறவு கசந்தது. சில மாதங்களுக்கெல்லாம் நவாஸைக் கைது செய்த ராணுவம் அவரைச் சிறையிலும் தள்ளியது. ஆட்சியைத் தன் கையில் எடுத்துக் கொண்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதமரின் சமரச முயற்சி இத்துடன் முடிவுக்கு வந்தது. இனி இப்படியொரு வாய்ப்பு நேராது. ராணுவம்-ஐஎஸ்ஐ கூட்டுக்கு எதிராக புதிய பிரதமர் இம்ரான்கானால் செயல்பட்டுவிட முடியாது. புதிய பிரதமருக்கு இதில் சில பாடங்கள் இருக்கின்றன.

முதலாவது, இந்தியாவுடன் சமரசமாகப் போவது பதவிக்கே ஆபத்தாக முடியலாம்.

இரண்டாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பிரதமரையும் அவருடைய முழுப் பதவிக்காலமும் விட்டுவைத்ததில்லை ராணுவத் தலைமை.

மூன்றாவது,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் பதவிக்காலம் முடியும் முன்னரே வெளிநாடுகளுக்குத் தப்பியோடி அரசியல் கைதிகளாகியிருக்கிறார்கள், சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள். பேநசீர் புட்டோ விஷயத்தில் இம் மூன்றுமே நடந்துள்ளன.

பாகிஸ்தானில் அரசியல் நிர்வாகம் என்பது ராணுவத்தின் கைப்பாவையாகத்தான் தொடர்கிறது. இம்ரான்கான் ஏதாவது சமரச முயற்சியில் ஈடுபட்டால்கூட அது அந்த நாட்டு ராணுவம் உத்தரவிட்டதால்தான் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமரசத்துக்கு மீண்டும் புதிய முயற்சி நடக்கிறது என்றாலும் நான் அதில் சேரமாட்டேன். ஆசையாக இருக்கும், ஆனால் அது சூழ்ச்சிகள் நிறைந்தது. பிற்காலத்தில் அதைப்பற்றிப் பெருமைபட பேச முடியும் என்றாலும் கூடாது.

நான்கு காரணங்களுக்காக இக் கதையை நான் சொல்கிறேன். 1. வாஜ்பாயின் மறைவு, 2. நவாஸ் ஷெரீபின் சிறைவாசம், 3. இம்ரான் கான் புதிய பிரதமராகியிருப்பது, 4. சம்பவம் நடந்து இருபது ஆண்டுகளாகிவிட்டது.

- சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
தமிழில்: ஜூரி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x