Last Updated : 23 Aug, 2018 06:06 PM

 

Published : 23 Aug 2018 06:06 PM
Last Updated : 23 Aug 2018 06:06 PM

‘என்னுடைய அரசில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை; ஒவ்வொரு பைசாவும் ஏழைகளைச் சென்றடையும்’: பிரதமர் மோடி உறுதி

என்னுடைய அரசில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. மத்திய அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் ஏழை மக்களைச் சென்றடையும். 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் சொந்த வீடு கிடைக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

குஜராத் மாநிலத்துக்கு இரு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். வல்சாத் மாவட்டத்தில் பிரதமர் கிராமப்புற வீடுகட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பெண்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

என்னுடைய அரசில் ஏழைகளுக்காக டெல்லியில் இருந்து ஒரு காசு செலவு செய்யப்பட்டால் கூட அந்த ஒரு காசும் முழுமையாக, 100 சதவீதம் ஏழைகளுக்குச் சென்று சேரும். என்னுடைய அரசில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை.

மத்திய அரசின் திட்டங்களைப் பெறுவதற்கும், வீடுகட்டும் திட்டங்களில் பயனடைவதற்கும் மக்கள் யாரிடமும் இப்போது கையூட்டு கொடுக்கத் தேவையில்லை. 2022-ம் ஆண்டுக்குள் இந்த நாடு 75-வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் போது, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பது எனது கனவாகும்.

கிராமப்புறங்களில் உள்ள ஒரு கோடி மக்களுக்கு வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறிய வீடுகளும், நகர்ப்புறங்களில் வசிக்கும் 2.95 கோடி மக்களுக்கு 2022-ம் ஆண்டுக்குள் வீடுகள் வழங்க இலக்காக வைத்துள்ளோம்.

நான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, உங்களுக்கு பின்புறம் இருந்த வீட்டைக் கவனித்தேன். பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் மிகுந்த தரமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. என்னுடைய அரசில் இடைத்தரகர்கள் இல்லாத காரணத்தால்தான் இந்த அளவுக்குத் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்க முடிந்தது.

நான் இப்போது உங்களிடம் துணிச்சலாகக் கேட்கிறேன். இந்த நாடே உங்களைப் பார்க்கிறது. நீங்கள் கூறுங்கள் இந்த வீட்டைக்கட்டுவதற்கு யாருக்கேனும் லஞ்சம் கொடுத்தீர்களா?

விதிமுறைப்படி வீடு கிடைத்திருப்பதை எண்ணி பெண்களும், சகோதரிகளும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஒரு ரூபாய் கூட அவர்கள் லஞ்சமாக அளிக்கவில்லை என்று பெருமையாக கூறுகிறார்கள்.

குஜராத் மாநிலம் எனக்கு அதிகமாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் எவ்வாறு கனவுகளை நிறைவேற்றுவது எனக் கற்றுக்கொடுத்திருக்கிறது. என்னுடைய கனவு, 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தினருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும்.

வீடுகட்டுவதற்கு அரசு பணம் தருகிறது, ஆனால், வீடுகள் அனைத்தும் குடும்பத்தினரின் வியர்வையால் கட்டப்பட்டுள்ளது.இந்த வீட்டை எப்படி வடிவமைக்கலாம், எந்தப் பொருட்கள் கொண்டு கட்டமைக்கலாம் என்பதைக் குடும்பத்தினர்தான் முடிவு செய்தார்கள். நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்தோம், ஒப்பந்ததாரர்கள் மீது அல்ல. ஒரு குடும்பத்தினர் சொந்தமாக வீடு கட்டினால், அதுதான் அவர்களுக்குச் சிறந்ததாக அமையும்.

அடுத்த ஒன்றைரை ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். நாட்டில் எந்த வீடும் மின் இணைப்பு இல்லாமல் இருக்காது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, ரூ.586 கோடி மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குடிநீர் வழங்குதல் திட்டத்தை ரிமோட் மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இங்குச் சுத்திகரிக்கப்படும் குடிநீர் 175 மலைக்கிராம மக்களுக்கு வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x