

இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் கார் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து சம்பா மாவட்டத்தை நோக்கி சுற்றுலா கார் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. மணாலி அருகே உள்ள ரனீனல்லா பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மலைப் பள்ளத்தாக்கில் கார் விழுந்து நொறுங்கியது. இந்தக் கோர விபத்தில், காரில் பயணம் செய்த 11 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார், அப்பகுதிக்கு விரைந்து சென்று 11 பேரின் உடல்களையும் மீட்டனர். பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.