Last Updated : 21 Aug, 2018 09:49 PM

 

Published : 21 Aug 2018 09:49 PM
Last Updated : 21 Aug 2018 09:49 PM

அடுத்த சோதனை: வீடுகளுக்குள் விஷப்பூச்சிகள், மிரட்டும் கொடிய நச்சுப்பாம்புகள்: அச்சத்தில் கேரள மக்கள்; 55 பேருக்கு பாம்புக்கடி

கேரளாவில் மழை குறைந்து, வெள்ளம் வடிந்து வீடுகளுக்குள் சென்ற மக்களை விஷப்பூச்சிகளும், கொடிய நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளும் வரவேற்பதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கேரளாவில் பெய்த மழை, அடித்த வெள்ளத்தில் சிக்கி 14 மாவட்டங்கள் சின்னாபின்னமாகி இருக்கின்றன. ஏறக்குறைய கடந்த 10 நாட்களில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக படிப்படியாக மழை குறைந்து, வெள்ளம் வடிந்துள்ளதால், நிவாரண முகாம்களில் இருந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஆனால், வீடுகளுக்குத் திரும்பிய மக்களுக்கு அதிர்ச்சியும், வேதனையும்தான் மிஞ்சுகிறது.

வெள்ள நீர் சூழ்ந்துள்ள வீடுகளில் எல்லாம் குறைந்தபட்சம் 2 அடிக்கு மேல் சேறும், களிமண்ணும் நிரம்பியுள்ளது. அந்தக் களிமண்ணையும், சேற்றையும் சுத்தம் செய்து அள்ளச் சென்றால், அந்தக் களிமண்ணில் விஷப்பூச்சிகளும், பாம்புகளும் நெளிவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

வீடுகளில் உள்ள கழிப்பறைகள், வாஷ்பேஸின், வீடுகளில் உள்ள கப்போர்டுகள், சமையலறை, பாத்திரங்கள், வாஷிங் மெஷின், பீரோக்கள் போன்றவற்றில் கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகள், ராஜநாகங்கள், கட்டுவிரியன்கள், கண்ணாடி விரியன், ரத்தவிரியன் பாம்புகள் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 5 நாட்களில் மட்டும் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் கேரளாவில் பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷின் உதவியை மக்கள் நாடியுள்ளனர். மேலும், பாம்பு பிடிக்கும் பலரையும் வரவழைத்துள்ளனர்.

அங்கமாலியில் உள்ள லிட்டில் பிளவர் ஹாஸ்பிடலில் உள்ள ஒரு டாக்டர் கூறுகையில், ''கேரள காடுகளில் அதிகமாக ராஜநாகங்கள், கட்டுவிரியன், நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் பாம்புகள் இருக்கின்றன. இந்தப் பாம்புகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வீடுகளில் தஞ்சமடைந்துள்ளன.

வீடுகளுக்குத் திரும்பியுள்ள மக்கள் வீட்டின் பல்வேறு இடங்களில் பாம்புகள் இருப்பதைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர். வீடுகளைச் சுத்தம் செய்யும் மக்கள் மிகவும் பாதுகாப்புடன், கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 5 நாட்களில் மட்டும் இதுவரை 55 பேர் பாம்புக்கடிக்கு சிகிச்சைக் வந்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட மக்கள் தொடர்புத்துறையும் வீடுகளுக்குச் செல்லும் மக்கள் பாம்புகள் குறித்த விழிப்புணர்வுடன் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறது.

வீடுகளைச் சுத்தம் செய்தபின், மண்ணெண்ணெய் அல்லது டீசல் கொண்டு வீடுகளைச் சுத்தம் செய்து காயவைக்க வேண்டும். அப்போதுதான் பாம்புகள், விஷப்பூச்சிகள் மீண்டும் வீடுகளுக்குள் வராமல் இருக்கும்'' என்று மருத்துவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த 5 நாட்களில் மட்டும் பாம்பு பிடிக்கும் வல்லவரான சுரேஷ் 140 பாம்புகளைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x