

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியிலிருந்து வெறும் 40 நிமிடங்களில் திருமலைக்கு நடந்து சென்று சாதனை புரிந்துள்ளான் 4 வயது சிறுவன்.
வேண்டுதலை நிறைவேற்றும் வகை யில், தினமும் சுமார் 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்கள் வரை திருப்பதியி லிருந்து அலிபிரி மலையில் கால்நடையாக திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அலிபிரியிலிருந்து திருமலைக்கு 11 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இது கடல் நீர்மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் உள்ளது. தினமும் அதிகாலை வேளையில் உடற்பயிற்சி செய்ப வர்களும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்வது வழக்கம். இவர்கள் கூட திருமலை செல்வதற்கு 2 மணி முதல் இரண்டரை மணி நேரம் வரை எடுத்துக்கொள்கின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை காலை ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா மண்டலம், மாடூரு கிராமத்தைச் சேர்ந்த தோனோஷ்வர் சத்யா (4) என்ற சிறுவன், தனது பிறந்த நாளில் வெறும் 40 நிமிடம் 20 வினாடிகளில் அலிபிரியிலிருந்து திருமலைக்கு நடந்தே சென்று சாதனை படைத்துள்ளான்.
கடந்த ஆண்டு இவர்களது குடும்பத்தினர் திருமலைக்கு வந்தபோது, பெற்றோர் வேண்டாம் என கூறியபோதும், தோனோஷ்வர் சத்யா மலையேறினாராம். இவரது ஆர்வத்தைப் பார்த்த பெற்றோர் மாதம் ஒருமுறை திருமலைக்கு வந்து மலையேறும் பயிற்சி கொடுத்துள்ளனர்.