Last Updated : 31 Aug, 2018 01:44 PM

 

Published : 31 Aug 2018 01:44 PM
Last Updated : 31 Aug 2018 01:44 PM

காஷ்மீரில் போலீஸாரின் உறவினர்கள் 7 பேரைக் கடத்திச் சென்று தீவிரவாதிகள் அராஜகம்

தெற்கு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் போலீஸாரின் உறவினர்களை தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து உடனடியாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வழங்க முடியவில்லை என்றும், கடத்தல்காரர்களின் அறிக்கையை உறுதிப்படுத்த தொடர்ந்து முயன்றுவருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் சோபியான், குல்காம், அனந்தநாக் மற்றும் அவந்திபோரா பகுதிகளிலிருந்து காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த ஏழு பேரின் குடும்ப உறுப்பினர்கள் நேற்று இரவு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச தீவிரவாதியின் மகன் கைதுக்கு எதிர்ப்பு

தேடப்பட்டு வரும் சர்வதேச தீவிரவாதி சையது ஜலாலுதீனின் இரண்டாவது மகனை தேசிய புலனாய்வு முகமை கைது செய்ததைத் தொடர்ந்து தீவிரவாதிகள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சோபியன் மாவட்டத்தின் ட்ரென்ஸ் பகுதி துணை காவல் கண்காணிப்பாளரின் மருமகன் அட்னான் அஹமது ஷா (26), என்பவரையும் தீவிரவாதிகள் நேற்று இரவு கடத்தியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதே மாவட்டத்தில், வாதூ கிராமத்தில் வசித்துவரும் காவல் உயரதிகாரி ஒருவரின் மகன் யாசிர் பட் என்பவரும் தீவிரவாதிகளால் நேற்று இரவு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இம்மாவட்டத்தில் உள்ள பெர்திபோராவில் ஒரு காவலரின் வீட்டை குடும்பத்தோடு தீக்கிரையாக்கிவிடுவதாக தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர்.

அடித்துத் துன்புறுத்திய தீவிரவாதிகள்

மத்திய காஷ்மீர் பகுதியான காந்தர்பால் மாவட்டத்தில் கடத்தப்பட்ட ஒரு போலீஸ்காரரின் உறவினரை கடுமையாக அடித்துத் துன்புறுத்திய தீவிரவாதிகள் அவரை விடுவித்துள்ளதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

மற்றபடி காஷ்மீரின் மற்ற பகுதிகளில் கடத்தப்பட்ட மற்றவர்களின் நிலை என்ன என்பது குறித்த விவரங்கள் எதையும் உயரதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x