Last Updated : 19 Aug, 2018 07:36 AM

 

Published : 19 Aug 2018 07:36 AM
Last Updated : 19 Aug 2018 07:36 AM

வெள்ளத்தில் மிதக்கிறது குடகு;  மீட்புப் பணிகளில் ராணுவம் தீவிரம்- முதல்வர் குமாரசாமி ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்

கேரளாவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட முதல்வர் குமாரசாமி மீட்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

கர்நாடக மாநிலம் குடகு, உடுப்பி, ஷிமோகா, சிக்மகளூரு, ஹாசன், சாமராஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளாவை ஒட்டியுள்ள குடகு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்து வருவதால் காவிரி, ஹாரங்கி உள்ளிட்ட ஆறுகள் கரை புரண்டு ஓடுகின்றன. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் கடந்த 3 தினங்களாக பலத்த காற்றுடன் இடைவிடாமல் கனமழை பெய்துவருவதால் குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, குஷால் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளும், தேசிய நெடுஞ்சாலைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மடிகேரி, சோமவார் பேட்டை, வீராஜ் பேட்டை உள்ளிட்ட இடங்களில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதால், மக்கள் தங்க இடமில்லாமல் தவித்தனர்.

அவரத்தி, தொட்ட காமரஹள்ளி, கண்டனஹொள்ளி, சிக்க ஒசூர் உள்ளிட்ட மலை கிராமங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள‌ன. அக் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலை உச்சியில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள மக்களை தீயணைப்பு படையினரால் மீட்க முடியாததால், ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். தொட்ட காமரஹள்ளி, முட்கோல் ஆகிய இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை ராணுவப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். அதே வேளையில் அவரத்தி பகுதியில் சிக்கியுள்ள மக்களை தொடரும் கனமழையால் மீட்க முடியாமல் ராணுவ படையினர் திணறினர்.

இதனிடையே குடகில் பெய்த மழையால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களில் 10 பேர் பலியாகியுள்ளனர். கண்டனஹொள்ளி, முத்கோல் உள்ளிட்ட மலை கிராமங்கள் முற்றிலுமாக நிலச்சரிவில் உருக்குலைந்துள்ளது. தீயணைப்பு படையினர், ராணுவ படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தை நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் குடகு மாவட்ட அதிகாரிகள் மற்றும் மீட்பு படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து குமாரசாமி, '' குடகில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் தங்குவதற்காக 17 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான உணவு, உடை, பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்துவருகிறது. முதல்கட்டமாக குடகில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளோம்'' என்றார்.குடகில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கர்நாடக முதல்வர் குமாரசாமி ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x