

மணிப்பூர் மாநில மக்களின் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சனிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவின் விவரம் வருமாறு:
மணிப்பூர் மாநிலத்தில் குடியேறுவதற்கு ’பெர்மிட் முறையை’ அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரி நடை பெற்றுவரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதுதொடர்பாக மாநில சட்டமன்றத்தில் இருமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வடகிழக்கு எல்லை மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகியவற்றில் இந்த ‘பெர்மிட்’ முறை தொடர்ந்து வருகிறது.
மணிப்பூரின் மொத்த மக்கள் தொகை 27 லட்சம். வங்கதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளிலிருந்து அந்த மாநிலத்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சமாக உயர்ந்துள்ளது. இது அம்மாநில மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் வாழ்க் கையைப் பாதித்துள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமையும் திருப்திகரமாக இல்லை. விரைவில் சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
டி.ராஜாவும் மணிப்பூர் மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டாக்டர் எம்.நாரா சிங்கும் இணைந்து அளித்துள்ள மற்றொரு மனுவில், மணிப்பூரில் மத்திய அரசு செய்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் அம்மாநிலத்துக்குப் பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.