கேரளாவில் வெள்ளப் பாதிப்பு இடங்களைப் பார்வையிட்டார் மோடி: நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.
கேரளா பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை அம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நூறு ஆண்களில் இல்லாத வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்துக்கு உதவ பல்வேறு தரப்பிலிருந்து உதவிக்கரங்கள் நீள்கின்றன.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை இந்தியப் பிரதமர் கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து விமானம் மூலம் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். இதனையடுத்து கேரள மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு இடைக்கால வெள்ள நிவாரண உதவியாக ரூ.500 கோடியை அறிவித்துள்ளார்.
வெள்ள நிவாரணத்துக்காக ரூ.8,316 கோடியை கேரள அரசு கேட்டிருந்தது. முன்னதாக மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.100 கோடியை ஒதுக்கிய நிலையில் தற்போது ரூ. 500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதுதவிர, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் 14 ராணுவக் குழுக்கள் தற்போது ஈடுபட்டுள்ளன. அதுதவிர, கடற்படையைச் சேர்ந்த பல்வேறு குழுக்களும், கடலோரக் காவல் படையினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலமாக மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
