

2011-ல் தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்யும் வகையில் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், ஹிஸ்புல் அமைப்பின் தலைவர் சையது சலாவுதீனின் இளைய மகன் ஷகீல் யூசுஃப் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை அன்று அவரைக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய என்ஐஏ செய்தித் தொடர்பாளர், ''ஷகீல் யூசுஃப் ஸ்ரீநகரின் ராம்பக் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சிஆர்பிஎப் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து அவரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த 1 வருட காலமாக என்ஐஏ, ஷகீலுக்கு சம்மன்கள் அனுப்பியுள்ளது. ஆனால் ஜூன் 30-க்குப் பிறகு எந்த சம்மனுக்கும் அவர் ஆஜராகவில்லை.
ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ நிறுவனத்தில் ஷகீல் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். மார்ச்சில் என்ஐஏ அனுப்பிய சம்மனுக்கு அவர் கடைசியாக ஆஜராகியிருந்தார்'' என்று தெரிவித்தார்.
என்ன நடந்தது?
கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து டெல்லி வழியாக ஹவாலா பணப் பரிவர்த்தனை மூலம் காஷ்மீர் மாநிலத்துக்கு பெரும் தொகை கைமாறி உள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் காஷ்மீரில் தீவிரவாதத்தில் ஈடுபட பல வழிகளில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. தொடர் விசாரணையில் சவுதி அரேபியாவில் தலைமறைவாக உள்ள அஜீஸ் அகமது பட் என்பவரிடம் இருந்து ‘வயர் மணி டிரான்ஸ்பர்’ மூலம் ஏராளமான தொகையை ஹிஸ்புல் முகாஜிதின் அமைப்பின் தலைவர் சையது சலாவுதீன் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.
அந்தப் பணம் பாகிஸ்தானில் இருந்து ஹவாலா பணப் பரிவர்த்தனையாக டெல்லி வழியாக காஷ்மீருக்குச் சென்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து அவரது மூத்த மகன் சையத் ஷாகித் யூசுப் பணத்தைப் பெற்றுள்ளார். அந்தப் பணம் காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு தீவிரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
அதனால் சையது சலாவுதீனின் மகன் சையத் ஷாகித் யூசுப்பை என்ஐஏ அதிகாரிகள் அக்டோபர் 24-ம் தேதி கைது செய்தனர். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது சலாவுதீனின் இளைய மகன் ஷகீல் யூசுப்பும் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.