Last Updated : 31 Aug, 2018 04:19 PM

 

Published : 31 Aug 2018 04:19 PM
Last Updated : 31 Aug 2018 04:19 PM

இங்குதான் நாளுக்குநாள் விலை உயர்வு; பாதிவிலைக்கு பெட்ரோல் டீசல் ஏற்றுமதி: மோடி அரசு மீது காங்கிரஸ் சாடல்

பாஜக தலைமையிலான மோடி அரசில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது. வரிவிதிப்பால் அரசுக்கு ரூ.11 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்புசரிவு ஆகியவற்றால், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல் லிட்டர் ரூ.81.58 காசுகளும், டீசல் லிட்டர் ரூ.74.18 காசுகளாகவும் உயர்ந்துவிட்டது. இதனால் அடுத்து வரும் மாதங்களில் பணவீக்கம் உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மத்தியில் ஆளும் மோடி அரசின் மிகக்கொடூரமான வரிவிதிப்பின் விளைவால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்த வரிவிதிப்பால் மோடி அரசு ஏற்கனவே ரூ.11 லட்சம் கோடி லாபமடைந்துவிட்டது.

எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டதால், சாமானிய மக்கள், நடுத்தர மக்கள், விவசாயிகள், சிறு, குறுதொழில் செய்பவர்கள், போக்குவரத்து தொழில் செய்பவர்கள் என அனைவரும் இந்த வேதனையைத் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விலைஉயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, சாமானிய மக்களின் பட்ஜெட்டில் மிகப்பெரிய ஓட்டையை உண்டாக்கிவிட்டது.

மோடி அரசை இந்த நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள், எரிபொருளில் கொள்ளையடிக்கும் மோடி அரசையும் மறக்கவும்மாட்டார்கள். இதற்கு அடுத்து வரும் தேர்தலில் பாஜக அரசுக்குத் தகுந்த பதிலடியை மக்கள் அளிப்பார்கள்.

மக்களின் வேதனைகளையும், படும் துன்பங்களையும் மத்திய அரசுபுரிந்து கொள்ள மறுக்கிறது.

டீசல்விலை லிட்டருக்கு ரூ.70.26 காசுகள் உயர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது, இதனால், உணவுப்பணவீக்கத்துக்கு கொண்டு செல்கிறது. டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.78.57 காசுகளாக உயர்ந்துவிட்டதால், சாமானிய, நடுத்தர மக்கள் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், பெட்ரோல் மீது உற்பத்தி வரி 211.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் மீது 433.06 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12 முறை உற்பத்தி வரி ஏற்பட்டுள்ளது.

நம்முடைய நாட்டில் இருந்து பெட்ரோல், டீசல் 15 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. நம்நாட்டில் சராசரியாக பெட்ரோல் டீசல் விலை ரூ.78, ரு.86 ஆக இருக்கிறது. ஆனால், மோடி அரசு 15 வெளிநாடுகளுக்கு பெட்ரோலை லிட்டர் ரூ.34க்கும், டீசலை ரூ.29-க்கும் ஏற்றுமதி செய்துவருகிறது. இது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா,மலேசியா, இஸ்ரேல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இப்படித்தான், மக்களுக்கு மோடி அரசு துரோகம் இழைக்கிறது, முதுகில் குத்துகிறது. ஜிஎஸ்டிவரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வாருங்கள் என்று கூறியும் அதைக் காதில் வாங்க மோடி அரசு மறுக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x