

கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 17 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள குடகு, தலைக்காவிரி, மடிகேரி ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இத னால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பின. இதனால் கடந்த மாதம் தமிழகத்துக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கன அடிநீர் வரை திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த மழை படிப்படியாக குறைந்தது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணையில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 10 கன அடியாக குறைக்கப்பட்டது.
நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
இதனிடையே கடந்த 3 தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்தது.
சனிக்கிழமை மாலை கிருஷ்ணராஜசாகர் அணை மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டியது (124.80 அடி). அணைக்கு வினாடிக்கு 11,950 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் அதே அளவு உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணைக்கு வினாடிக்கு 9,500 கன அடிநீர் வந்துக் கொண்டிருப்பதால் 3500 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல ஹாரங்கி, ஹேமாவதி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் கடந்த சில தினங்களைக் காட்டிலும் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது. எனவே மேட்டூர் அணைக்கு வந்துக் கொண்டிருக்கும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.