Last Updated : 17 Aug, 2018 03:22 PM

 

Published : 17 Aug 2018 03:22 PM
Last Updated : 17 Aug 2018 03:22 PM

மழை கோரதாண்டவம்: கேரளாவில் ஒரேநாளில் 100-க்கும் மேற்பட்டோர் பலி: உயிரிழப்பு 164 பேராக அதிகரிப்பு

கேரள மாநிலத்தில் கோரத் தாண்டவமாடிய மழையால், நேற்று ஒரேநாளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 164-ஆக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாகப் பெருமழை பெய்து வருகிறது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துவிட்டாலும் கூட, காசர்கோடு தவிர்த்து இன்னும் 13 மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணிநேரத்துக்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணைக்குத் தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால், அங்கிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேரளாவில் மழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. ஆனால், இதில் நல்ல விஷயம் என்னவென்றால், பலபகுதிகளில் மழை குறைந்து வருகிறது. ஆதலால், மழை குறைந்திருக்கும் பகுதிக்குள் சென்று, இன்று மாலைக்குள் அங்குச் சிக்கி இருக்கும் மக்களை மீட்டுவிடுவோம் என நம்புகிறேன்.

பிரதமர் மோடி என்னிடம் மாநிலத்தின் வெள்ள நிலவரங்களை தொலைப்பேசி மூலம் கேட்டறிந்தார். இன்று வெள்ளச்சேதங்களையும், பாதிக்கப்பட்ட இடங்களையும் பிரதமர் மோடி பார்வையிட வரஉள்ளார்.

கடந்த 8-ம் தேதியில் இருந்து இதுவரை 1,568 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 2.23 லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாகப் பெய்த மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர்.

பத்திணம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 52 ஆயிரத்து 856 குடும்பங்கள் வெள்ளம், மழையால் பாதிக்கப்பட்டு வீடு, உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூடுதலாக விமானப்படையின் ஹெலிகாப்டர்களை மீட்புப்பணிக்காக அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்த ஹெலிகாப்டர்கள் செங்கனூர், சாலக்குடி பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டு வருகின்றன.

16 ராணுவ பட்டாலியன்கள், 28 எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவுகள், 39 பிரிவு தேசிய பேரிடர் மீட்புப்படையினர், 42 கடற்படை குழுவினர் ஆகியோர் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதலாக 14 குழு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வர உள்ளனர்.

இடுக்கி, வயநாடு, பத்தினம்திட்டா மாவட்டத்தின் சில பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கி இருக்கிறது. மீட்புப்படையினர் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், வெள்ளநீரில் சிக்கி இருக்கும் மக்களை, தங்கள் குடியிருக்கும் வீட்டை விட்டு மீட்புப்படையினருடன் வர மறுக்கிறார்கள்.

குறிப்பாகக் குட்டநாடு பகுதியில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டால், அவர்கள் தங்களின் வீடுகளைவிட்டு வர மறுக்கிறார்கள்.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

மேலும் பெரியாறு ஆற்றில் இருந்து பாயும் வெள்ளத்தால், எர்ணாகுளம், திருச்சூர் நகரம் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. குறிப்பாக பரவூர், காளடி, சாலக்குடி, பெரம்பாவூர், மூவாற்றுப்புழா ஆகிய நகரங்கள் மிகமோசமான பாதிப்பை அடைந்துள்ளன.

சாலக்குடியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அது செய்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. அதில், நாங்கள் 150 மக்கள் தண்ணீருக்குள் தவிக்கிறோம். எங்களுக்கு உணவு, குடிக்க நீர் இல்லை. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீருக்கு அஞ்சி வீட்டின் மொட்டை மாடிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் மீட்புப்படையினர் தங்கவைத்துள்ளனர். எர்ணாகுளம், திருச்சூர் முகாம்களில் மட்டும் 50 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரை கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான அனுபவம் வாய்ந்த மீனவர்கள் பத்தினம்திட்டா பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீட்புப்படையினருடன் சேர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அச்சன்கோயில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, பந்தளம் நகருக்குள் புகுந்துள்ளது. நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கும், மாடிகளில் தங்கி இருக்கும் மக்களுக்கும் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இரு மாவட்டங்களில் மட்டும் 20 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மழைகாரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு, பல்வேறு நகரங்களுக்கு ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எர்ணாகுளம், திருச்சூர் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஆலப்புழா பகுதியில் இருந்து திருவனந்தபுரம் வரை ரயில் மெதுவாகஇயக்கப்படுகிறது. கோட்டயம் பகுதிக்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x