Published : 09 Aug 2018 07:30 PM
Last Updated : 09 Aug 2018 07:30 PM

ஓடும் ரயிலில் ‘கிகி சவால்’ நடனமாடி சிக்கிய 3 இளைஞர்கள்: நீதிமன்றம் வினோத தண்டனை

மும்பை ரயிலில் கிகி சவால் செய்த யூடியூப்பில் வெளியிட்ட 3 இளைஞர்களையும் மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு நீதிமன்றம் வினோத தண்டனை அளித்துள்ளது.

கிகி சவால் நடனம் என்பது கனடா நாட்டைச் சேர்ந்த ராப் பாடகர் டிரேக் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கிகி சவால் செய்பவர், ஓடும் காரில் இருந்து இறங்கிப் பாடலுக்கு நடனமாடி பின் மீண்டும் காரில் ஏறிக்கொள்வதாகும்.

இந்த கிகி சவாலைச் பலமாநிலங்களில் இளைஞர்கள் செய்து விபத்தில் சிக்கி உயிரை இழந்துள்ளனர். இந்த விபரீதசெயலில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் வழக்குபாயும், கடும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த எச்சரிக்கையையும் மீறி, மகாராஷ்டிராவில் ஷியாம் சர்மா(24), துருவ்(23), நிசாந்த்20) ஆகிய 3 இளைஞர்கள் கிகி சவால் செய்து போலீஸிடம் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மும்பையில் உள்ள வாசி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் கிகி சவால் செய்து அதை வீடியோவாக எடுத்து யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தனர். இவர்களின் வீடியோவை ஒருவாரத்தில் 1.50 லட்சம் மக்கள் பார்த்து ரசித்தனர்.

இந்த வீடியோ ரயில்வே அதிகாரிகளின் பார்வைக்கு சென்றது. இதையடுத்து, இந்த மூன்று இளைஞர்களையும் தீவிரதேடுதலுக்கு பின் நேற்று கைது செய்தனர்.

இது குறித்து ரயில் பாதுகாப்புப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் கிகி சவால் செய்த 3 இளைஞர்களையும் நேற்று கைது செய்தோம். மொத்தம் 5 இளைஞர்கள் இதில் ஈடுபட்டனர், இதில் 2 பேர் இன்னும் சிக்கவில்லை. அந்த இருவரைத் தேடி வருகிறோம்.

இவர்கள் மூன்றுபேரும் மும்பையில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இருக்கும் போது கைது செய்யப்பட்டனர்.

வாசி ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். நீதிபதியிடம் கிகி சவால் குறித்தும், இந்த இளைஞர்களின் செயல்பாடு குறித்தும் தெரிவித்தோம். 3 இளைஞர்களையும் கடுமையாகக் கண்டித்த நீதிபதி, 3 இளைஞர்களும் காலையிலும் மாலையிலும், 3 நாட்களுக்கு ரயில்நிலையத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அடுத்த 3 நாட்களுக்கு இந்த மூன்று இளைஞர்களும் காலை 11 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் ரயில்நிலையத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும்போது, கிகி சவால் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும்வகையில் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

இவர்கள் 3 பேர் மீது, ரயில்வே பாதுகாப்புச் சட்டம் 145 பி, 147, 154, 156 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை இந்த 3 இளைஞர்களும் ஏற்காவிட்டால், ஒரு ஆண்டு சிறை, ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x