Last Updated : 09 Aug, 2018 09:26 PM

 

Published : 09 Aug 2018 09:26 PM
Last Updated : 09 Aug 2018 09:26 PM

முத்தலாக் மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

எதிர்கட்சிகள் கோரிக்கைக்கு ஏற்ப ’முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு(திருமண உரிமைகளின் பாதுகாப்பு) சட்டம் 2017’ எனும் மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கும் அந்த மசோதா நிறைவேறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மசோதாவின் திருத்தம் எனக் கூறப்படுவதன்படி, முத்தலாக் அளிப்பது சட்டப்படி குற்றம் என்பதும், அதற்காக 3 வருட சிறை, அபராதம் என்பதும் தொடரும். இதில் ஜாமீன் அளிக்க தற்போது வகை செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் வழக்கில் கைதானவரின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட பின் மாஜிஸ்டிரேட் குற்றவாளிக்கு ஜாமீன் அளிப்பதை முடிவு செய்வார்.

இருவர் சம்மதத்துடன் பிரிய விரும்பும் தம்பதிகள் சமரசம் செய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமரசத்தை மாஜிஸ்டிரேட் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு செய்து வைக்க வகை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மனைவி மைனர் குழந்தைகளை தன்வசம் வளர்க்கவும் மாஜிஸ்டிரேட்டை அனுகலாம்.

இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் இடையே ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கம் இருந்தது. இது புனித நூலான குர்ஆனில் இல்லாதவகையில், தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக நாடு முழுவதிலும் உள்ள முஸ்லீம் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இறுதி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த வருடம் ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், முத்தலாக் முறை ரத்து செய்யப்பட்டு அது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. இத்துடன் அதை முடிவிற்கு கொண்டுவர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என ஆலோசனை அளிக்கப்பட்டது.

இதை அடுத்து மத்திய அரசு கடந்த வருடம் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் அதற்கான சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தியது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் சிக்கி நிலுவையில் இருந்தது. இதற்கு அந்த மசோதாவில் கடுமையான சில அம்சங்கள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் தெரிவித்தனர்.

தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ள அம்சங்கள், முத்தலாக் மசோதாவில் சேர்க்க எதிர்கட்சிகளால் கோரப்பட்டவை. எனவே, இதற்கு பின்பும் முத்தலாக் மசோதா அமலாகாமல் போனால் அதற்கு எதிர்கட்சிகள் காரணம் எனும் நிலை உருவாகும். இது தமக்கு சாதகமாகும் எனக் கருதி இந்த மாற்றத்தை மத்திய அரசு செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x