

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, அந்த மாநில அரசு மதுபானங்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாகப் பெருமழை பெய்து வருகிறது. இதுவரை மழைவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டர் பலியாகியுள்ளனர், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநிலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி திரட்டும் வகையில், மதுபானங்கள் மீதான கலால் வரியை அடுத்த 100 நாட்களுக்கு மட்டும் உயர்த்தி கேரள மாநில அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசாக் ட்விட்டரில் நேற்று கூறுகையில், மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய அதிகமான நிதி தேவைப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாம் மீண்டுவர வேண்டும். ஆதலால், அடுத்த 100 நாட்களுக்கு மதுபானங்கள் மீதான கலால் வரி 0.5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட இந்த வரிப்பணம்முழுமையும் வெள்ளநிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ரூ.230 கோடி கூடுதலாக அரசுக்குக் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மழை எச்சரிக்கை
இதற்கிடையே வெள்ள நிலவரம் குறித்து சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். இது குறித்து ட்விட்ரில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், காசர்கோட் தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணிநேரத்துக்கு மிக,மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலைமையம் எச்சரித்துள்ளது. ஆதலால், காசர்கோட்டைத் தவிர்த்து மீதமுள்ள 13 மாவட்ட மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதேசமயம், மழைவெள்ளம் குறித்தோ, மழை குறித்தோ தவறான செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்களை அரசு கண்காணித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மழை குறித்த விவரங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் மிக விரைவாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஜுவன் பாபு விடுத்த வேண்டுகோளில், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து சமூக ஊடகங்களில் வீண் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அணையின் பாதுகாப்பு குறித்துப் பரப்பிவிடப்படும் செய்திகள் அனைத்தும் தவறானவை. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.