Last Updated : 01 Aug, 2018 08:12 AM

 

Published : 01 Aug 2018 08:12 AM
Last Updated : 01 Aug 2018 08:12 AM

ராகுல் காந்தியின் நோக்கம் நிறைவேறுமா...?

நான் அரசியல் நிருபராக இருந்த காலத்தில் இந்திய அரசியலில் ஜாம்பவான்களாக இருந்த பிரணாப் முகர்ஜி, எல்.கே. அத்வானி, சீதாராம் கேசரி ஆகியோரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

கடந்த 1984-85-களில் பாரதிய ஜனதாவுக்கு மக்களவையில் 2 இடங்கள்தான். 1980-களின் இறுதியில், கட்சியைப் பலப்படுத்தும் வேலையில் இறங்கினார் அத்வானி. கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு 1998-ல் பாஜக ஆட்சியைப் பிடிக்க உதவினார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், முலாயமின் சமாஜ்வாதி கட்சி, லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், முஸ்லிம் லீக் ஆகியவை எங்களை தேச விரோதியாக பார்க்கின்றன. இந்த 5 கட்சிகள் தவிர எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார் என அத்வானி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து சிவசேனா, சிரோமணி அகாலி தளம், தெலுங்கு தேசம் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தன. முதல் இரண்டு கட்சிகளும் மதம் சார்ந்தவை. தெலுங்கு தேசம் கட்சிக்கு காங்கிரஸ்தான் முதல் எதிரி என்பதால் அதற்கும் வேறு வழியில்லை.

வாஜ்பாய் தலைமையில் உருவான கூட்டணிதான் தனது முழு பதவிக் காலத்துக்கும் ஆட்சியில் இருந்த முதல் கூட்டணி அரசு. இதனால் கூட்டணி அரசு என்றாலே விரைவில் கவிழ்ந்து போகும் என்ற பயமும், காங்கிரஸுக்கு மாற்றே இல்லை என்ற எண்ணமும் விலகியது. அதன்பிறகு சோனியா தலைமையில் இரண்டு கூட்டணி ஆட்சிகள் முழு பதவிக் காலத்துக்கும் ஆட்சியில் இருந்தன.

எனினும் முக்கியமான அம்சங்கள் மாறவே இல்லை. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவே முடியாது. வேறு சில கட்சிகள் கூட்டணியில் சேர்ந்திருப்பதை தவிர வேறு வழியே இல்லை. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு உதாரணம். காங்கிரஸுடன் தான் எப்போதும் கூட்டணி சேரும். பொதுவாக எந்தத் தேர்தலிலும் 75 முதல் 150 வரையிலான இடங்கள் ஒரே கருத்துடைய மாற்றுக் கட்சிகளுக்குத்தான் போகும். இதனால் 160 இடங்களில் வெற்றி பெற்றால்போதும், கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்தால் பெரும்பான்மையான 272 இலக்கை எட்டி விடலாம். இப்போது நிலைமை மாறி வருகிறது. 2014-ல் நரேந்திர மோடியின் பாஜக தனிக் கட்சியாகவே பெரும்பான்மை இடங்களில் வென்றது.

வரும் தேர்தலிலும் 2014 நிலைமைதான் இருக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்கின்றனர். பாஜக விசுவாசிகளே அப்படித்தான் நினைக்கின்றனர். ஆனால் எப்படியும் 230 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்கிறார்கள். இங்கேதான் ஒரு பிரச்சினை ஆரம்பிக்கிறது.

உத்தவ் தாக்கரேக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கிறார் ராகுல் காந்தி. “நல்ல உடல் நலமும் சந்தோஷமும் எப்போதும் கிடைக்கட்டும் என வாழ்த்தினேன்” என ட்விட்டரில் தெரிவிக்கிறார். இதில் என்ன இருக்கிறது என நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருக்கிறது.

காங்கிரஸை பொருத்தவரை பாஜகவை விட சிவசேனா எதிரிக் கட்சி. அதோடு, அது பாஜகவின் கூட்டணி கட்சியும் கூட. அப்படிப்பட்ட கட்சியின் தலைவருக்கு வெளிப்படையாகவே வாழ்த்துச் சொல்கிறார் ராகுல் என்றால் அதில் 3 விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் பாஜக - சிவசேனா கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் ராகுலுக்குத் தெரிகிறது. இரண்டாவதாக, 2019 தேர்தலில் தான் பிரதமராகா விட்டாலும் பரவாயில்லை.. மோடியைத் தவிர யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆவதை காங்கிரஸ் ஆதரிக்கும் என்ற அவரின் நிலைப்பாடு. மூன்றாவதாக, 2019-ல் கூட்டணி ஆட்சிக்கு இந்தியா திரும்பினால் தேசிய அரசியலில் அத்வானி உருவாக்கிய கூட்டணித் தத்துவம் மாறும் சூழல்.

காதல், போர் மற்றும் அரசியலில் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதெல்லாம் பழைய பழமொழி. எதிரியின் சிறந்த நண்பனோடு உங்களால் நெருங்க முடிந்தால், அரசியலில் அதுதான் புதிய அணுகுமுறை. மக்களவைத் தேர்தல் என்பது 9 செட்டுகள் கொண்ட டென்னிஸ் போட்டி. 5 செட்டுகளைக் கைப்பற்றினால் வெற்றி. இங்கு 9 செட்டுகள் என்பது 9 மாநிலங்கள். உ.பி., மகாராஷ்டிரா, ஆந்திரா (தெலங்கானாவும் சேர்த்து), தமிழகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிஹார், கர்நாடகா மற்றும் கேரளா. இந்த மாநிலங்களில் மாற்றத்துக்கு வாய்ப்பிருக்கிறது. ஒடிசா, மேற்கு வங்கம், குஜராத்தில் அரசியல் மாற்றத்துக்கு வாய்ப்பில்லை. இந்த 9 மாநிலங்களிலும் மொத்தம் 351 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் 5 மாநிலங்களில் வெற்றி பெறும் கூட்டணி 200 தொகுதிகளைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

மீண்டும் மோடி-ஷா ஆட்சி ஏற்படாமல் தடுப்பதுதான் ராகுலின் நோக்கம். சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் உ.பி.யில் சேர்ந்து போட்டியிட்டால், அங்கு பாஜக அதிக இடங்களைப் பிடிக்க முடியாது. 2014-ல் பிடித்த 73 இடங்களில் பாதியைக் கூட பிடிக்க முடியாது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியாணா மாநிலங்களிலும் கடந்த முறை போல் அதிக இடங்களைப் பிடிக்க வாய்ப்பில்லை. இந்த இழப்பை வட கிழக்கு மாநிலங்களில் ஈடு செய்யும் நம்பிக்கையில் பாஜக இருக்கிறது. இதனால் உ.பி.க்கு அடுத்தபடியாக அதிக எம்.பி. இடங்களைக் கொண்ட (48 இடங்கள்) மகாராஷ்டிராவில் கூடுதல் கவனத்தைச் செலுத்துகிறது. சிவசேனா கூட்டணியில் இல்லாவிட்டாலும் அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் என அமித் ஷா தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ராகுலுக்கும் அது தெரியும். அதனால்தான் பாஜகவுக்கு மகாராஷ்டிரா கிடைக்காமல் செய்ய வேண்டும் என ராகுல் விரும்புகிறார்.

‘ஹாப்பி பர்த் டே உத்தவ்ஜி’ என்பதன் அரசியல் அர்த்தம் இதுதான். நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்குப் பதில் அளித்துப் பேசிய பிரதமர் மோடியின் உரையைக் கவனித்தால் ஒன்று தெரியும். ‘தெலங்கானா வளர்ச்சியின் நாயகன்’ என முதல்வர் கே.சந்திரசேகர ராவைப் பாராட்டினார் மோடி. அவர்தான் முதலில் பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகளின் கூட்டணியை உருவாக்க முயன்றவர். மோடியால் அவரையே நெருங்க முடியும்போது, ராகுல் ஏன் உத்தவ் தாக்கரேயுடன் நெருக்கம் காட்டக் கூடாது. இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். இது தேர்தல் நேரம். இரண்டு தரப்புமே அதற்குத் தயாராகி வருகிறது என்பதுதான் அது.

 -சேகர் குப்தா,

‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x