

பாட்னா: தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் வென்றது. எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க வேண்டும். பிஹார் சட்டப்பேரவையில் 243 இடங்கள் உள்ள நிலையில், ஆர்ஜேடி சரியாக 25 இடங்களை வென்றதால் எதிர்க்கட்சியாக தேர்வாகியுள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று (திங்கள்) பாட்னாவில் நடைபெற்றது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ், ஜக்தானந்த் சிங், லாலுவின் மூத்த மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ரகோபூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற தேஜஸ்வி யாதவ், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த கூட்டத்தில், தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யா இடையேயான மோதல் குறித்தும் பேச்சு எழுந்தது. அப்போது பேசிய லாலு பிரசாத் யாதவ், “இது குடும்பத்தின் உள் விவகாரம். இது குடும்பத்துக்குள்ளேயே தீர்க்கப்படும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் மிகவும் கடினமாக உழைத்ததாக லாலு பிரசாத் யாதவ் பாராட்டு தெரிவித்தார். அவரால் மட்டுமே கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 14-ம் தேதி வெளியாகியது. இதையடுத்து, கட்சியில் இருந்தும், தனது குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக ரோகிணி ஆச்சார்யா கடந்த 15-ம் தேதி அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நான் அரசியலைவிட்டு வெளியேறுகிறேன். மேலும், எனது குடும்பத்தில் இருந்தும் விலகுகிறேன். சஞ்சய் யாதவும், ரமீஸும் இதைத்தான் என்னிடம் கேட்டார்கள். எல்லா பழிகளையும் நான் ஏற்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.
தேஜஸ்வி யாதவின் நம்பிக்கைக்கு உரியவர்களான சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோரின் பெயர்களை ரோகிணி ஆச்சார்யா வெளியிப்படுத்தியதை அடுத்து, 16-ம் தேதி அவருக்கும் அவரது சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கும் இடையே சண்டை மூண்டது. அப்போது, “தேர்தல் தோல்விக்கு நீ தான் காரணம். உன்னால்தான் நாங்கள் சபிக்கப்பட்டோம்.” என்று தேஜஸ்வி யாதவ் கூச்சலிட்டதாகவும், அவர் மீது செருப்பை எரிந்ததாகவும் தகவல் வெளியானது.
பின்னர் இது குறித்து ரோகிணி வெளியிட்ட பதிவுகளில், “நேற்று (சனிக்கிழமை) ஒரு மகள், சகோதரி, மனைவி, ஒரு தாய் அவமதிக்கப்பட்டாள். மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டப்பட்டாள். (தேஜஸ்வி) காலணியை கழற்றி அடிக்கவும் முயற்சி செய்தனர். ஆனால் நான் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. வேறு வழியின்றி கண்ணீர்விட்டு நின்ற பெற்றோரையும், சகோதரிகளையும் விட்டுப் பிரிந்து வந்தேன்.
எனது தாய் வீட்டில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர். நான் ஆதரவற்று நிற்கிறேன். எனது பாதையை வேறு யாரும் தேர்வு செய்ய வேண்டாம். எந்தவொரு குடும்பத்திலும் ரோகிணி போன்ற பெண் பிறக்கக் கூடாது. நான் மோசமானவள், அழுக்கானவள் என்று குற்றம் சாட்டினர். எனது தந்தைக்கு (லாலு) சிறுநீரகத்தை கொடுத்து, கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் தேர்தலில் சீட்களை பெற்றுக் கொண்டதாகவும் குற்றம் சுமத்தினர்.
திருமணமான அனைத்து பெண்களுக்கும் ஓர் அறிவுரையை கூற விரும்புகிறேன். உங்கள் வீட்டில் அண்ணன், தம்பி இருந்தால் தவறுதலாககூட உங்கள் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம். தம்பியோ, அண்ணனோ அல்லது அவரது ஹரியானா நண்பரையோ (தேஜஸ்வியின் நண்பர் சஞ்சய் யாதவ்) சிறுநீரகத்தை தானம் செய்யச் சொல்லுங்கள்.
திருமணமான பெண்கள் அவரவர் குடும்ப நலன்களில் மட்டுமே அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் கணவர், பிள்ளைகள் மீது மட்டும் அக்கறை செலுத்துங்கள். எனது தந்தையின் குடும்பத்துக்காக எனது 3 பிள்ளைகளை சரியாக கவனிக்கவில்லை. நான் மாபெரும் தவறு செய்துவிட்டேன்.
எனது கணவர், அவரின் உறவினர்கள் அறிவுரையை மீறி எனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினேன். எனது கணவரின் பேச்சை கேட்கவில்லை. கடவுள் போன்ற எனது தந்தையை காப்பாற்ற சிறுநீரகத்தை தானமாக வழங்கினேன். அதற்கு நன்றிக்கடனாக என்னை மோசமானவள் என்று சபிக்கின்றனர். நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம். என்னைப் போன்ற மகளாக யாரும் இருக்க வேண்டாம்.” என்று தெரிவித்திருந்தார்.