

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த 57 வயதான பெண், தனியார் நிறுவனத்தில் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் உள்ளார். இவரை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வாட்ஸ்அப் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.
மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, ‘‘உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்திருக்கிறது. அதில் 4 பாஸ்போர்ட்கள், 3 கிரெடிட் கார்டுகள், போதை பொருட்கள் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. நீங்கள் உடனடியாக மும்பைக்கு வராவிட்டால், உங்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்படும்'' என எச்சரித்தார்.
இதற்கு அந்த பெண், தனக்கு அத்தகைய பார்சல் வர வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். அடுத்த சில தினங்களில், பிரதீப் சிங் என்ற நபர் அவரை ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டார். தன்னை சிபிஐ அதிகாரியாக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், ‘‘தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தியதற்காக நீங்கள் விரைவில் கைது செய்யப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் சிக்கியுள்ளன. உங்களது வீடு எங்களது கண்காணிப்பில் இருக்கிறது.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் உங்களது அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள நிதி புலனாய்வுப் பிரிவின் சரிபார்ப்புக்காக சமர்ப்பிக்க வேண்டும்'' என்றார். பின்னர் ராகுல் யாதவ் என்ற நபர் தொடர்பு கொண்டு வழக்கின் டெபாசிட்டாக ரூ.30 லட்சம் செலுத்துமாறு கூறினார்.
பின்னர் அந்தப் பெண் தனது சொத்து விவரங்கள், வங்கி விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்தார். மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி வங்கி மூலமாக ரூ.30 லட்சம் செலுத்தினார். இதைத் தொடர்ந்து வழக்கில் ஜாமீன் டெபாசிட் பணமாக ரூ.2 கோடி தர வேண்டும் என கேட்டனர். அதனையும் அந்தப் பெண் வழங்கியுள்ளார். இதே பாணியில் 187 முறை பணப்பரிமாற்றம் செய்து, அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.31.83 கோடி பணத்தை மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பறித்துள்ளனர்.
இந்த பணத்தை கடந்த மார்ச் 26-ம் தேதிக்குள் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை தராததால், அந்தப் பெண் கடந்த நவம்பர் 14-ம் தேதி பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பெங்களூரு இணைய குற்றப்பிரிவு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.