‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்
Updated on
1 min read

லக்னோ: டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தீவிரவாதிகள் மீது மெஹபூபா முப்திக்கு எப்போதும் அனுதாபம் என உத்தர பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் மொஹ்சின் ராசா விமர்சித்துள்ளார்.

“தேசத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் அவர்களின் குடும்பம் முதல் ஆளாக வந்து நிற்கிறது. ஏனெனில், அவர்களுக்கும் தீவிரவாதிகளும் இடையிலான உறவு மிகவும் பழையது.

கடந்த 1989-ல் அவரது சகோதரியை தீவிரவாதிகள் கடத்திய போது இந்த உறவு ஏற்பட்டது. அதை அவரது தந்தை முப்தி முகமது சயீத் பேணி காத்து வந்தார். இப்போது அதையே மெஹபூபா முப்தியும் தொடர்கிறார். ஸ்லீப்பர் செல்லாக செயல்படும் இத்தகைய அமைப்புகள் தேசத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் எப்போதும் தீவிரவாதிகள் மீது அனுதாபம் காட்டுகிறார்” என மொஹ்சின் ராசா தெரிவித்துள்ளார்.

மெஹபூபா முப்தி சொன்னது என்ன? - “காஷ்மீரில் அனைத்தும் சரியாக உள்ளதாக நீங்கள் உலகுக்குச் சொன்னீர்கள். ஆனால், காஷ்மீரின் பிரச்சினைகள் செங்கோட்டையின் முன் எதிரொலித்தது. ஜம்மு-காஷ்மீரை பாதுகாப்பானதாக மாற்றுவதாக நீங்கள் உறுதி அளித்தீர்கள். ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, உங்கள் கொள்கைகள் டெல்லியை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது.

மத்திய அரசில் எத்தனை பேர் உண்மையான தேசியவாதிகள் என்று எனக்குத் தெரியவில்லை. மருத்துவ கல்வி படித்த இளைஞர் ஒருவர் வெடி மருந்தை கொண்டு தற்கொலை செய்து கொண்டு மற்றவர்களையும் கொன்றால், நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று அர்த்தம். இந்து - முஸ்லீம் அரசியல் செய்வதன் மூலம் நீங்கள் வாக்குகளைப் பெறலாம், ஆனால் நாடு எந்த திசையில் செல்கிறது?” என அண்மையில் மெஹபூபா முப்தி தெரிவித்திருந்தார்.

டெல்லி - செங்​கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 7 மணி அளவில் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இந்த குண்டுவெடிப்பில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் நபி என விசாரணை அமைப்பு தெரிவித்தது. அவரது வீட்டை பாதுகாப்பபு படைத்துள்ளனர் தகர்த்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in