

மும்பை: பிஹாரில் எதிர்க்கட்சிகள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிட்டாலும் வாக்காளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை உறுதியாக ஆதரித்துள்ளனர் என்றும், பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
இதுபற்றி பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “பிஹாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் தேர்தலில் போட்டியிட்டன, ஆனால் பொதுமக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார். ஒருவரின் குடும்பத்திலோ அல்லது கட்சியிலோ என்ன நடக்கிறது என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். நாங்கள் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துகிறோம்.
பிஹார் தேர்தல் முடிவு குறித்து தொழிலதிபர் ராபர்ட் வதேரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் தேர்தல்களைப் பற்றிய அறிவைக் கொண்ட ஒரு நிபுணரா? அவர் ஒரு அரசியல்வாதியா? அவர் ஏதாவது ஆராய்ச்சி செய்தாரா?. அவரைப் போன்றவர்களைப் பற்றிக் கேட்டு ஏன் எங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?.” என்று கூறினார்
பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைப் பெற்றது. மகா கூட்டணி வெறும் 35 இடங்களை மட்டுமே வென்றது. பாஜக 89 இடங்களையும், ஜேடியு 85 இடங்களையும், எல்ஜேபி 19 இடங்களையும் வென்றது. மகா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் மட்டுமே வென்றது.