

போபால்: ம.பி.யில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்ளிக்கு அருகே ஒருவர் போலி 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்லானி காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விவேக் யாதவ் (21) என்பவரை கைது செய்தனர்.
அவருடைய பாக்கெட்டிலிருந்து போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு ஒரு அறையில் இருந்த பிரின்ட்டர்கள், பிரிசிஷன் ஸ்கேனர்கள், தாள்கள், சிறப்பு மை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விவேக், யூடியூப் வீடியோக்களை பார்த்தும், இணையதளங்களில் உலவியும் போலி ரூபாய் நோட்டு அச்சடிப்பது தொடர்பான தகவலை தெரிந்து கொண்டுள்ளார். 23 போலி 500 ரூபாய் நோட்டுகளை தயாரித்துள்ளார்" என்றனர்.