

குவாஹாட்டி: அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்பூர் பகுதியில் விஎச்பி சார்பில் பேரணி நடைபெற்றது.
அப்போது பேரணியாக சென்றவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பாகல்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து, முஸ்லிம் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் அங்குள்ள காலிபிளவர் தோட்டத்தில் புதைக்கப்பட்டன. இதன் காரணமாக இது, “காலி பிளவர் புதைப்பு வழக்கு" என்று அழைக்கப் படுகிறது.
இந்த சூழலில் அசாம் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அசோக் சிங்கால் தனது சமூக வலைதளத்தில் காலிபிளவர் புகைப்படத்தை பதிவிட்டு, "காலி பிளவர் விவசாயத்துக்கு பிஹார் ஒப்புதல் வழங்கியிருக்கிறது" என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவு குறித்து அவர் வேறு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கடந்த 1989-ம் ஆண்டு பிஹார் கலவரத்தையே அமைச்சர் அசோக் சிங்கால் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “என்னை இந்து என்று அழைப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். அதேநேரம் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தியாவின் தீவிர ஆதரவாளராகவும் நான் செயல்படுகிறேன். நானோ, எனது மதமோ, எனது நாடோ வன்முறை, படுகொலைகளை ஒருபோதும் ஆதரிப்பது கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.