

புதுடெல்லி: பிஹாரில் முஸ்லிம்கள் சுமார் 20 சதவிகிதம் பேர் உள்ளனர். அதன்படி 45 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்த முறை 11 முஸ்லிம்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சீமாஞ்சல் பகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம். இங்கு அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளது.
மேலும், இதர பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கான முஸ்லிம் வாக்குகளையும் ஒவைசி கட்சி பிரித்துள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சியில் 2020 தேர்தலில் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏ.க்களில் 4 பேர் ஆர்ஜேடியில் இணைந்தனர். அவர்கள் இந்த தேர்தலில் அதே தொகுதிகளில் போட்டியிட்டனர். எனினும், வேறு புதிய முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஏஐஎம்ஐஎம் வாய்ப்பளித்து வெற்றி பெற வைத்துள்ளது.
தற்போது ஆர்ஜேடி 3, காங்கிரஸ் 2 மற்றும் ஐஜத.வில் ஒருவர் வெற்றி பெற்று எம்எல்ஏ.க்களாகி உள்ளனர். கடந்த 1985 தேர்தலில் 34 முஸ்லிம்கள் எம்எல்ஏ.க்களானார்கள். அந்த நேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்படாமல் ஒன்றுபட்ட பிஹாரில் 324 தொகுதிகள் இருந்தன. கடைசியாக நடைபெற்ற 2020 தேர்தலிலும் 19 முஸ்லிம்கள் எம்எல்ஏக்களாக இருந்தனர். ஆனால், தற்போது இது 11 ஆக குறைந்துள்ளது.
இந்த தேர்தலில் முஸ்லிம்களுக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை. இதன் கூட்டணி கட்சியான சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தியில் முஸ்லிம்கள் போட்டியிட்டும் வெற்றி பெறவில்லை.