

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஓர் இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.
தேர்தலில் விஐபி கட்சி 12 இடங்களில் வேட்பாளரை நிறுத்தி களம் கண்டது. மகாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றால் விஐபி கட்சியின் நிறுவனரான முகேஷ் சாஹ்னிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தகவலும் வெளியானது.
ஆனால், விஐபி கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர். முகேஷ் சாஹ்னியின் சகோதரர் சந்தோஷ் சாஹ்னி கவுரா கிராம் தொகுதியில் போட்டியிட்ட 12 வேட்பாளர்களில் 8 வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இது, அக்கட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.