“நல்லாட்சி, சமூக நீதிக்கு கிட்டிய வெற்றி” - பிஹார் தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

“நல்லாட்சி, சமூக நீதிக்கு கிட்டிய வெற்றி” - பிஹார் தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: "நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் நலன் வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், தேர்தல் வெற்றிக்காக பிஹார் மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், "நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் நலன் வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்றச் சிறப்புமிக்க மற்றும் இணையற்ற வெற்றியை அளித்ததற்காக பிஹார் மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. உங்களின் இந்த ஆணை, பிஹார் மக்களுக்கு சேவை செய்வதற்கும் பிஹாருக்காக உழைப்பதற்கும் எங்களுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

சமீப மாதங்களாக கடும் உழைப்பை வழங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒவ்வொரு தொண்டரையும் நான் பாராட்டுகிறேன். அவர்கள் மக்களிடையே பணியாற்றி இருக்கிறார்கள், நமது திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்றிருக்கிறார்கள், எதிர்க்கட்சிகளின் பொய்களை தோலுரித்திருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

வரும் காலங்களில் பிஹாரின் முன்னேற்றம், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரத்துக்காக நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்வோம். மாநிலத்தின் இளைஞர் சக்தியும், பெண்கள் சக்தியும் செழிப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளை அதிக அளவில் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்துக்கு முழுமையான வளர்ச்சியை வழங்கியுள்ளது. எங்களின் சாதனைப் பதிவுகள் மற்றும் மாநிலத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கான எங்களின் தொலைநோக்குத் திட்டங்களின் அடிப்படையில்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். இந்த இணையற்ற வெற்றிக்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பத்தைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார், சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மாஞ்சி, உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in