

புதுடெல்லி: பிஹார் வாக்காளர்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும், ஊடுருவல்காரர்களுக்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கை மீது கொண்ட நம்பிக்கையின் அடையாளம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 201 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. மாலை 5.30 மணி நிலவரப்படி பாஜக 92 இடங்களிலும், ஜேடியு 83 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்) 19 தொகுதிகளிலும், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 5 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் முன்னிலை அல்லது வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம், பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "அறிவு மற்றும் கடின உழைப்புக்குப் பெயர் போன ஜனநாயகத்தின் பாதுகாவலர்களான பிஹார் மக்களுக்கு கோடான கோடி வணக்கங்கள். பிஹார் மக்களிடம் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்த இந்த மகத்தான தீர்ப்பு, பிஹாரில் வளர்ச்சி, பெண்களின் பாதுகாப்பு, நல்லாட்சி, ஏழைகளின் நலன் ஆகியவற்றில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளிப்படுத்திய உறுதிப்பாட்டுக்கான ஒப்புதலாகும்.
கடந்த 11 ஆண்டுகளில் மோடி, பிஹாருக்காக விடா முயற்சியுடன் உழைத்துள்ளார். மேலும், நிதிஷ் குமார் மூலம் காட்டாட்சியின் இருளில் இருந்து பிஹாரை வெளியே கொண்டு வர பாடுபட்டுள்ளார். இந்த தீர்ப்பு வளர்ச்சியடைந்த பிஹார் என்ற வாக்குறுதிக்கானது. பிஹார் மக்களின் ஒவ்வொரு வாக்கும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வளங்களுடன் விளையாடும் ஊருடுவல்காரர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிரான மோடி அரசாங்கத்தின் கொள்கை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குறிக்கிறது. வாக்கு வங்கிக்காக ஊடுருவல்காரர்களை பாதுகாப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
பிஹார் மக்கள் முழு நாட்டின் மனநிலையையும் பிரதிபலித்துள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தம் அவசியம் என்பதையும் அதற்கு எதிரான அரசியலுக்கு இடமில்லை என்பதையும் மக்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அதனால்தான், ராகுல் காந்தியின் காங்கிரஸ் இன்று பிஹாரில் கடைசி இடத்துக்குச் சென்றுள்ளது. காட்டாட்சி நடத்தியவர்களும் திருப்திப்படுத்தும் அரசியலை கடைப்பிடிப்பவர்களும் எந்த வேடத்தில் வந்தாலும் கொள்ளையடிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்பதையும் தங்கள் செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே வாக்குகள் அளிக்கப்படும் என்பதையும் பிஹார் மக்கள் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிதலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட பிஹார் பாஜகவின் பூத் மட்டத்தில் இருந்து மாநில அளவு வரையிலான அனைத்து நிர்வாகிகளையும் நான் வாழ்த்துகிறேன்
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், மக்கள் அளித்துள்ள நம்பிக்கைக்கு உரிய வகையில் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்பதை பிஹார் மக்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.