

பாட்னா: தேர்தலை ஒட்டி பாஜகவில் இணைந்து அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட இளம் நாட்டுப்புற பாடகி மைதலி தாக்கூர், பிஹாரின் மிக இளம் வயது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரைப் பெற இருக்கிறார்.
பிரபல நாட்டுப்புற பாடகியான மைதிலி தாக்கூர், கடந்த மாதம் 14-ம் தேதி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, 15-ம் தேதி தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதி பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். 14 கட்ட வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இவர் 46,680 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் பினோத் மிஸ்ராவைவிட, 7,309 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிக்கிறார். கணிசமான முஸ்லிம்கள் வாழும் இத்தொகுதியை பாஜக முதன்முறையாக கைப்பற்ற இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் பிஹாரின் மிக இளம் வயது சட்டப்பேரவை உறுப்பினராக மைதிலி தாக்கூர் பெயர் பெறுவார். கடந்த ஜூலை 25ம் தேதி 25 வயதை எட்டியவர் மைதிலி.
முன்னதாக, தவுசீப் ஆலம் என்பவரே பிஹாரின் மிக இளம் வயது சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெயரை பெற்றிருந்தார். கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது இவரது வயது 26. இதேபோல், 2015-ல் ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றபோது அவது வயது 26. இவர்கள் இருவரையும் விட குறைந்த வயதில் மைதிலி தாக்கூர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாக உள்ளார்.
கடந்த 2008 முதல் அலிநகர் தொகுதி மகா கூட்டணியின் கோட்டையாக இருந்து வந்தது. 2010 மற்றும் 2015 சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றவர் அப்துல் பாரி சித்திக். 2020ல் விஐபி கட்சியின் மிஷ்ரி லால் யாதவ் வெற்றி பெற்றார்.
தர்பங்கா மாவட்டத்தின் அண்டை மாவட்டமான மதுபனியில் உள்ள பெனிபட்டி என்ற பகுதியைச் சேர்ந்த மைதிலி தாக்கூர், தற்போது பெற்றோருடன் டெல்லியில் வசித்து வருகிறார். இந்திய பாரம்பரிய பக்தி இசையில் தேர்ச்சி பெற்றவரான இவர், நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர்.
தேர்தலில் தான் வெற்றி பெற்றால், மிதிலா ஓவியத்தை பள்ளியில் கூடுதல் பாடத்திட்டமாக சேர்க்க நடவடிக்கை எடுப்பேன், அலிநகரை சீதாநகர் என பெயர் மாற்றுவேன், கல்விக்கு குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்விக்கும் வேலையில்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.