

கார் விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சுமார் நான்கு மாதங்களுக்கு பிறகு காதலியுடன் சிக்கியுள்ளார்.
போலீஸ் விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அவர் கொலை செய்து விபத்துபோல் சித்தரித்தது தெரியவந்துள்ளது.
டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்.டி.ஐ) ஆர்வலர் சந்திர மோகன் சர்மா (38). ஆம் ஆத்மி கட்சியின் தீவிர உறுப்பினரான அவர், நொய்டாவிலுள்ள அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்களில் ஆர்.டி.ஐ உதவியால் பல்வேறு ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.
இதற்காக சர்மாவை கடந்த மே 2-ம் தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி சவீதா, கிரேட்டர் நொய்டா போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக காரில் கருகிய நிலையில் இருந்த சடலத்தை போலீஸார் கைப்பற்றினர்.
இந்நிலையில் இவ் வழக்கில் திடீர் திருப்பமாக பெங்களூரூவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் சந்திர மோகன் சர்மா பணியாற்றி வருவதும், அங்கு காதலியுடன் அவர் குடும்பம் நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரையும் உத்தரப் பிரதேச போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூரில் கைது செய்தனர். பின்னர் இருவரும் கிரேட்டர் நொய்டாவுக்கு கொண்டு வரப்பட்டு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டனர்.
இது குறித்து `தி இந்து'விடம் நொய்டா மாவட்ட போலீஸ் மூத்த அதிகாரி பிரித்தீந்தர் சிங் கூறியதாவது:
தனது கணவர் கொலை செய்யப்பட்டதாக சவீதா அளித்த புகாரில் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதேநாளில் சந்திரமோகனின் பக்கத்து தெருவில் வசித்த ஒரு இளம்பெண் காணாமல் போனார். அவரது செல்போன் எண்ணை கண்காணித்து வந்தோம். அதில் அவருக்கு சந்திரமோகனுடன் தொடர்பு இருந்ததைக் கண்டுபிடித்து இருவரையும் பெங்களூருவில் கைது செய்தோம்’ எனத் தெரிவித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை
கிரேட்டர் நொய்டா பகுதியில் ஆதரவற்று திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 38 வயது இளைஞரை காருடன் சேர்த்து எரித்து சந்திர மோகன் சர்மா கொலை செய் துள்ளார். இதற்கு அவரது மைத்துனரான விதீஷ் சர்மா உதவியாக இருந்துள்ளார்.
சந்திர மோகனுக்கும் அவரது மனைவி சவீதாவுக்கும் இடையே சில பிரச்சினைகள் இருந்துள்ளன. மனைவியுடன் வாழப் பிடிக்காத அவர், காதலியுடன் பெங்களூரூவில் குடியேறத் திட்டமிட்டுள்ளார்.
கொலை நாடகத்தை அரங்கேற்றினால், தான் பணியாற்றிய பிரபல தனியார் நிறுவனத்தில் சவீதாவுக்கு வேலை கிடைக்கும், பல லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என விதீஷிடம் சந்திர மோகன் ஆசை காட்டி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அரங்கேற்றப்பட்ட நாடகம், உத்தரப் பிரதேச போலீஸாரின் தீவிர விசாரணையால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.