“நிதிஷ் குமாரின் வசீகர தலைமையே வெற்றிக்கு காரணம்” - ஜேடியு மூத்த தலைவர் கே.சி.தியாகி

“நிதிஷ் குமாரின் வசீகர தலைமையே வெற்றிக்கு காரணம்” - ஜேடியு மூத்த தலைவர் கே.சி.தியாகி
Updated on
1 min read

பாட்னா: இந்த முறை 80 தொகுதிகளில் ஜேடியு வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முன்பே சொல்லப்பட்டது. நிதிஷ் குமாரின் வசீகரமான தலைமையே இதற்குக் காரணம் என்று ஜேடியு மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

காலை 11.30 மணி நிலவரப்படி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 85 தொகுதிகளிலும், ஜேடியு 75 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆர்ஜேடி 36 தொகுதிகளிலும் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டில் மூன்று பங்கு வெற்றியுடன் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

தேர்தல் முன்னணி நிலவரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜேடியு மூத்த தலைவர் கே.சி.தியாகி, “தேர்தலுக்கு முன்பாகவே ஜேடியு 80 தொகுதிகளில் வெற்றி பெறும் என பேசப்பட்டது. நிதிஷ் குமாரின் வசீகர தலைமை காரணமாகவே இது சாத்தியமாகி உள்ளது. தாங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறப் போவதாக ஆர்ஜேடி கூட்டணியினர் கூறுவார்கள். ஆனால், முடிவுகள் வரும்போது, தேர்தல் ஆணையத்தையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தையும், சிறப்பு தீவிர திருத்தத்தையும் குறை கூறுவார்கள்” என தெரிவித்தார்.

பிஹார் தேர்தலில் பாஜக 80 தொகுதிகளுக்கு மேலாக முன்னிலை வகித்து வரும் நிலையில், தேர்தல் நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முதல்வருமான மோகன் யாதவ், “தேர்தல் முன்னணி நிலவரம் உற்சாகம் அளிப்பதாக உள்ளது. கடந்த 2014 முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு ஒரு புதுவித வளர்ச்சி சார்ந்த அரசியலைக் கண்டுள்ளது. கடந்த மூன்று மக்களவைத் தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி, டெல்லியிலும் ஆட்சியைப் பிடித்து தனது நம்பகத்தன்மையை நிலைநாட்டியது.

அந்த வரிசையில் தற்போது மாநில தேர்தல் வெற்றிகளும் தொடர்கின்றன. முன்னதாக, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லியில் வெற்றி பெற்ற எங்கள் கூட்டணி தற்போது பிஹாரிலும் வெற்றியைப் பெற்றுள்ளது. பிரதமரின் தலைமையின் கீழ் நல்லாட்சி அலை வீசுகிறது என்பதையே இது காட்டுகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் முழு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in