

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே தீவிரவாதி டாக்டர் உமர் காருடன் வெடித்து சிதறியது குறித்து தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உமர் ஓட்டிய ஹுண்டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற ஈகோ ஸ்பாட் எனும் போர்டு நிறுவனத்தின் காரும் நேற்றுமுன்தினம் சிக்கியது. இந்நிலையில், நேற்று மூன்றாவதாக மாருதி பிரஸ்ஸா வகை கார் சிக்கியுள்ளது. இமாச்சலப் பிரதேச பதிவு எண் கொண்ட இந்த கார், தீவிரவாத மருத்துவர்கள் பணியாற்றிய ஹரியானாவின் அல் பலா மருத்துவக் கல்லூரியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சுற்றிவளைக்கப்பட்டது. இந்த காரையும் டெல்லி போலீஸார், என்ஐஏ உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்திய பிறகு இந்த காரில் தீவிரவாதி டாக்டர் உமர் தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
எனவே, தீவிர சோதனைக்காக தற்காலிகமாக அல் பலா பல்கலைக்கழகத்துக்குள் யாரையும் உள்ளே, வெளியே அனுமதிக்கவில்லை. இரண்டாவதாக சிக்கிய சிவப்பு நிற காரை ஓட்டி வந்தவர் காஷ்மீரை சேர்ந்த பயீம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் டாக்டர் உமரின் உறவினர். இவரிடமும் தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்த காரும் டாக்டர் உமர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியின் சீலாம்பூர் பகுதி முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், அல் பலா மருத்துவக் கல்லூரியின் 2 மாணவர்கள், சீலாம்பூரைச் சேர்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கல்லூரி விடுதியில் தங்கியுள்ள இவர்கள், உமர் நபியுடன் தொடர்பில் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் 2 மாணவர்களும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், டெல்லியில் வெடித்தது போல் நாடு முழுவதிலும் 32 கார்களை தயார் செய்து தாக்குதல் நடத்த தீவிரவாத மருத்துவர்கள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது
2 மவுலானாக்கள்: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் ஹரியானாவின் நூ மாவட்டத்தின் சிங்கார் கிராமத்தில் மவுல்வி ஹாபீஸ் முகமது இஷ்தியாக் என்பவர் விசாரணை வளையத்தில் உள்ளார். அல் பலா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மசூதியில் இவர் பல ஆண்டுகளாக மவுலானாவாக பணியாற்றுகிறார். இதே வழக்கில் என்ஐஏ, மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் மும்பராவில் ஓய்வு பெற்ற பேராசிரியர் இப்ராஹிம் ஆபிதி என்பவரும் சிக்கியுள்ளார். இவரது வீட்டில் சோதனை நடத்தி அவரது கைப்பேசி, மடிக் கணினி உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.