

ஸ்ரீநகர்: ஒயிட் காலர் தீவிரவாத சதி திட்டம் தொடர்பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது ஒயிட் காலர் தீவிரவாத சதி என அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக டாக்டர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
டெல்லி சம்பவத்தை அடுத்து, காஷ்மீர் முழுவதும் போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை சந்தேகத்தின் பேரில் 200 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில், அனந்த்நாக், புல்வாமா, குல்காம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நடத்திய சோதனையின்போது 3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து சில டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தகவலை காவல் துறை உயர் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.