

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 9 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. அந்த மாநிலத்தில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்கட்டமாக 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டமாக 11-ம் தேதி 122 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 67.13 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகளும், மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், விஐபி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன. இதுதவிர, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 11-ம் தேதிஇரவு வெளியாகின. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சுமார் 19 ஊடகங்கள் கணித்துள்ளன. மெகா கூட்டணிக்கு சுமார் 85 இடங்கள் கிடைக்கலாம் என்று முன்னணி ஊடகங்கள் கணித்துள்ளன.
இந்த சூழலில், பிஹார் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 243 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 46 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மையங்களுக்கு வெளியே துணை ராணுவப் படையினர், மாநில போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தலைநகர் பாட்னா உட்பட மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 மையங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதிகபட்சமாக பாட்னாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 14 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. காலை 9 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது பிற்பகலில் தெரிந்துவிடும்.