தவறான தகவல்கள் அளித்த விவகாரம்: அல் பலா பல்கலை.க்கு என்ஏஏசி நோட்டீஸ்

தவறான தகவல்கள் அளித்த விவகாரம்: அல் பலா பல்கலை.க்கு என்ஏஏசி நோட்டீஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய மதிப்பீடு மற்றம் அங்கீகார கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதாக தவறான தகவலை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மதீப்பீடு செய்து சான்றிக்கும் பணியை தன்னாட்சி அரசு அமைப்பான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பு, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், "அல் பலா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் சில, என்ஏஏசியால் அங்கீகாரம் பெறவில்லை அல்லது அதற்காக விண்ணப்பிக்கவில்லை.

ஆனால், அல் பலா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் அல் பலா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளி (1997 முதல் என்ஏஏசியின் ஏ கிரேடு சான்றிதழ் பெற்ற நிறுவனம்) என்றும், அல் பலா கல்வி மற்றும் பயிற்சிப் பள்ளி (2006 முதல் என்ஏஏசியால் ஏ கிரேடு பெற்ற நிறுவனம்) என்றும் சமூக வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. பொதுமக்களை, குறிப்பாக பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் தொடர்புடையவர்களை தவறாக வழிநடத்தக்கூடியது.

அல் பலா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளிக்கான என்ஏஏசி அங்கீகாரம் 2018-ல் காலாவதியாகிவிட்டது. அதேபோல், அல் பலா கல்வி மற்றும் பயிற்சிப் பள்ளியின் அங்கீகாரம் 2016-ல் காலாவதியாகிவிட்டது. இந்த இரண்டு கல்லூரிகளும் என்ஏஏசியின் அங்கீகாரத்துக்காக விண்ணப்பிக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் பெற்ற 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை நிகழ்ந்திய உமர் முகமது நபி, அல் பலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய மற்றொரு மருத்துவரான முஜாம்மில் ஷகில் என்பவரும் இதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பல்கலைக்கழகத்துக்கு என்ஏஏசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in