டெல்லியில் வெடித்த காரை மருத்துவர் உமர் ஓட்டிச் சென்றது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி!

டெல்லியில் வெடித்த காரை மருத்துவர் உமர் ஓட்டிச் சென்றது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி!
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் வெடித்த ஐ20 காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் நபியின் டிஎன்ஏ மாதிரிகள், அவரது தாயாரின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்கச் செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், காரில் குண்டை வெடிக்கச் செய்த உமரின் அடையாளங்களை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உமரின் தாயாரின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, லோக் நாயக் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத உடல்களுடன் ஒப்பிட்டு சோதனை செய்வதற்காக டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. உமர் மற்றும் அவரது தாயாரின் டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தியதாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி கார் குண்டுவெடிப்பை 'பயங்கரவாத சம்பவம்' என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், குண்டுவெடித்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி ஓட்டிச் சென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உமரின் தாயாரின் டிஎன்ஏ மாதிரிகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) சேகரிக்கப்பட்டு, குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்களுடன் ஒப்பிட்டு சோதனை செய்யப்பட்டன. உமர் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர்.

உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருக்கும்போது, சந்தேக நபர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in