

புதுடெல்லி: இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “சர்வதேச சமூகம் யதார்த்தத்தை நன்கு அறிந்துள்ளது. விரக்தியடைந்த பாகிஸ்தானின் சூழ்ச்சி நிறைந்த கருத்துக்களை சர்வதேச சமூகம் நம்பாது. பாகிஸ்தான் தலைமையால் கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறது.
பாகிஸ்தானின் அரசியலமைப்பு சீர்குலைவு மற்றும் அதிகார பறிப்பு நடவடிக்கையிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தியாவுக்கு எதிராக பொய்யான கதைகளை இட்டுக்கட்டுவது பாகிஸ்தானின் ஒரு தந்திரமாகும்.” எனத் தெரிவித்தார்.
நடந்தது என்ன? - இஸ்லாமாபாத்தின் ஜி-11 பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானை நிலைகுலைய செய்யும் வகையில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு இஸ்லாமாபாத்தில் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதே அமைப்புதான் வானா பகுதியிலும் தாக்குதல் நடத்தியது. அதில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவின் ஆதரவுடன் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு வெறும் கண்டனங்கள் போதாது” என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், குண்டுவெடிப்பு மூலம் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாகக் கூறினார்.