

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த குரூப் பார்மசூட்டிக்கல்ஸ் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் இடையே போலியான இமெயிலை அனுப்பி சைபர் மோசடி கும்பல் ரூ.2.16 கோடியை சுருட்டி உள்ளது.
இழந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி குரூப் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி கே. மகேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “குரூப் பார்மா அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணையில் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கு குஜராத்தின் வதோதராவில் தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அங்கிருந்து பல கணக்குகளுக்கு பணம் பிரி்த்து அனுப்பப்பட்டுள்ளது. நிதியை திருப்பிவிட பயன்படுத்தப்பட்ட அந்தப் பிரதான கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மொத்த தொகையையும் திரும்பப் பெற வங்கிகளுடன் பேசி வருகிறோம்’’ என்றனர்.