

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 122 தொகுதிகளுக்கான 2-வது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, இரண்டாம் கட்டத்தில் மொத்தம் 3.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 1,74,68,572 பேர் பெண்கள் ஆவர். ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 136 பெண்கள் உட்பட 1,302 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முதல்கட்ட தேர்தலில் பிஹார் வரலாற்றில் முதல்முறையாக சுமார் 7 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பதிவாகின. இவற்றை பெண்கள் ஆர்வமுடன் வந்து பதிவு செய்திருந்தனர். எனவே 20 மாவட்டங்களில் மீதம் உள்ள தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே முக்கியப் பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் சீமாஞ்சல் பகுதியில் உள்ள சுமார் 47% முஸ்லிம்களும் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்.
கடந்த 2020 தேர்தலில் இந்த 122 தொகுதிகளில் என்டிஏ-வுக்கு 67 இடங்களும் மெகா கூட்டணிக்கு 50 இடங்களும் கிடைத்தன. மெகா கூட்டணியின் இழப்புக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி காரணமானது. சீமாஞ்சல் பகுதியில் இக்கட்சி 3 சதவீத வாக்குகளை பெற்றது. 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பிஹாரில் இரண்டாம் கட்ட தேர்தலிலும் பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பெண்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தினர்.
இன்று தேர்தலை சந்திக்கும் 122 தொகுதிகளில் மெகா கூட்டணி சார்பில் ஆர்ஜேடி 70, காங்கிரஸ் 37, விஐபி 8, சிபிஐ (எம்எல்) 5, மார்க்சிஸ்ட் 4, இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களில் போட்டியிடுகின்றன. மெகா கூட்டணி கட்சிகளுக்கு இடையே 5 தொகுதிகளில் போட்டி நிலவுகிறது. என்டிஏ சார்பில் பாஜக 52, ஜேடியு 45, எல்ஜேபி 16, எச்ஏஎம் 6, ஆர்எல்எம் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பிரஷாந்த் கிஷோர் 122 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். ஒவைசி கட்சி சார்பில் 2 இந்து மற்றும் 25 முஸ்லிம்கள் களத்தில் உள்ளனர்.