

டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் விபத்துதானா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய அதிகாரிகள், சாலையில் ஓடிக் கொண்டிருந்த காரில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் எந்த பள்ளமும் ஏற்படவில்லை. எனவே அது குண்டு வெடிப்பா என்று எங்களால் இப்போதைக்கு கூற முடியாது. மேலும், குண்டு வெடிப்பு நடக்கும் இடங்களில் பொதுவாகக் காணப்படும் பெல்லட் அல்லது சிதறல்களால் ஏற்பட்ட காயங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துஆங்கில் ஊடகம் ஒன்றில் பேசிய மற்றொரு அதிகாரி, வெடிப்புக்கு காரணமான காரில் இரண்டு முதல் மூன்று பேர் பயணித்துள்ளனர். அது முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளது. தடயவியல் குழுக்கள் மாதிரிகளைச் சேகரித்து வருகின்றன. சம்பவம் நடந்த இடத்தில் ஆணிகளோ, சிதறல்களோ, உலோக துண்டுகளோ, கம்பிகளோ, ரசாயனங்களோ எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகத்திற்கிடமான எதுவும் இதுவரை கைப்பற்றப்படவில்லை” என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அனைத்து கோணங்களிலும் விசாரித்து அதை மக்களிடம் தெரிவிப்போம் என்றும் உறுதி அளித்திருந்தார்.
இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், பிஹார், மத்தியப் பிரதேசம்,ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உஷார் நிலை பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். அதே போல தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ரயில் நிலையங்களிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.