

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வெடி விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் பாதுகாப்பு பலமாக உள்ள பகுதிகளில் ஒன்று செங்கோட்டை. இந்தப் பகுதிக்கு உள்ளூர் மக்கள், சுற்றுலா வாசிகள் உட்பட பலர் வந்து செல்வது வழக்கம். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி இது. இந்தச் சூழலில் இன்று (நவ.10) மாலை 6.30 மணி அளவில் அந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் ‘கேட் 1’ நுழைவாயில் பகுதியில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அப்போது வெடிச் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் அங்காடிகளும் அதிகம் நிறைந்துள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறைக்கு இது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் அந்தப் பகுதியில் தீயை அணைத்தனர். காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் இருந்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது வெடி விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சாலையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை தீப்பிடித்து எரிந்தன. இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த பலர் அருகில் உள்ள எல்என்ஜேபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது குறித்த முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன? - ‘நடந்த சம்பவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒருவரின் கை துண்டாகி சாலையில் இருந்தது. என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை’, ‘இங்கு என்ன நடந்தது என்றே எங்களுக்கு புரியவில்லை. அங்கும் இங்குமாக மனித உடல்களின் பாகங்கள் சிதறி கிடந்தன. வாகனங்கள் தீப் பிடித்து இருந்தன’, ‘இந்த அளவுக்கு எனது வாழ்வில் நான் கேட்டது கிடையாது. அந்த சப்தம் அப்படி இருந்தது. மொத்தம் மூன்று முறை அதை நான் உணர்ந்தேன். நாங்கள் எல்லோரும் உயிரிழந்து விடுவோம் என நினைத்தோம்’, ‘எங்கள் வீடு அருகில் தான் உள்ளது. மாடியில் இருந்து பார்த்த போது சாலையில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்தேன்’ என சம்பவத்தை நேரில் கண்ட டெல்லிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் வேதனை - “இந்த துயரமான நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் ஆதரவாக இருக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டுகிறோம். இந்தச் சம்பவம் குறித்து அரசு ஆழமாகவும், விரைந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவு தலைவர் பவன் கெரா தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி - செங்கோட்டையை ஒட்டியுள்ள பகுதி முழுவதும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
டெல்லி காவல் ஆணைய விளக்கம்: இந்தச் சம்பவம் குறித்து டெல்லி காவல் துறையின் ஆணையர் சதீஷ் கோல்சா விளக்கம் அளித்துள்ளார். அவர் “இன்று மாலை 6.52 மணி அளவில் நிதானமாக நகர்ந்து கொண்டிருந்த கார் ஒன்று சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததை அடுத்து நின்றது. அந்த வாகனம் வெடித்தது. அதனால் அதற்கு அருகில் இருந்த மற்ற வாகனங்களும் சேதமடைந்தன. தடயவியல் நிபுணர்கள், தேசிய புலனாய்வு முகமையினர் உட்பட பல்வேறு விசாரணை அமைப்புகள் துறைகளை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழப்பும், காயங்களும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம். உள்துறை அமைச்சர் அம்த் ஷா, எங்களை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டறிந்தார். அவருக்கு தொடர்ந்து இது குறித்த தகவலை அளித்து வருகிறோம்” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டெல்லியில் மக்கள் நெரிசல் அதிகம் நிறைந்த பகுதியில் இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது தேசத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. டெல்லியில் உள்ள விமான நிலையம், ரயில் நிலையம் என பல்வேறு இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அனைத்து கோணங்களிலும் விசாரணை - அமித் ஷா உறுதி: “இன்று மாலை சுமார் 7 மணி அளவில் டெல்லி - செங்கோட்டைக்கு அருகில் உள்ள சுபாஷ் மார்க் டிராஃபிக் சிக்னல் பகுதியில் ஐ20 கார் ஒன்று வெடித்தது. இதில் அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தனர் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. எங்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி உயிரிழப்புகளும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த பத்து நிமிடங்களுக்குள் டெல்லி போலீஸார் அங்கு சென்றனர். தேசிய புலனாய்வு முகமையினர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் என்எஸ்ஜி அமைப்பை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். அனைத்து கோணங்களிலும் விசாரித்து அதை மக்களிடம் தெரிவிப்போம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உஷார் நிலை: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், பிஹார், மத்தியப் பிரதேசம்,ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உஷார் நிலை பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். அதே போல தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ரயில் நிலையங்களிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல்: பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று மாலை டெல்லியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து ஆலோசித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.