

போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஹல்பூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காகிதத்தில் மதிய உணவு வழங்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி பாஜகவின் வளர்ச்சி மாடல் இதுதான் என்ற கடுமையான விமர்சனத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்வைத்தார்.
இதையடுத்து, விஜய்பூர் வட்டார கல்வி அலுவலர் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியில் நவம்பர் 6-ம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தார்.
அதில், ‘‘ஹல்பூரில் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கான மதிய உணவை தயார் செய்யும் பணியை ஜெய் சந்தோஷ் மா சுய உதவிக் குழு (எஸ்எச்ஜி) மேற்கொண்டு வருகிறது. சம்பவத்தின்போது பாத்திரம் கழுவும் பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால், காகிதத்தில் உணவு பரிமாறப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை தொடர்ந்து, ஜெய் சந்தோஷ் மா சுய உதவிக் குழுவுக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.