கேரளாவில் ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி உட்பட 3 பேர் கைது

கேரளாவில் ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை: மந்திரவாதி உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

கோட்டயம்: உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்ரவதை செய்த மந்திரவாதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவன் வீட்டார் பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறி ஆவியை விரட்டுவதற்காக மந்திரவாதி சிவதாஸ் (54) என்பவரை அழைத்து வந்தனர்.

காலையில் வந்த மந்திரவாதி சிவதாஸ் பூஜையில் இறங்கியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணுக்கு சாராயம் கொடுத்து குடிக்குமாறு சித்ரவதை செய்துள்ளனர். மேலும் பீடியும் புகைக்க வேண்டும் என்று கூறி காலையில் தொடங்கி நள்ளிரவு வரை பூஜை நடத்தியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு உடலில் சூடு வைத்து மந்திரவாதி துன்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

கட்டாயப்படுத்தி சாராயத்தை குடிக்க வைத்ததால் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். இந்த விவரம் அறிந்ததும், அந்தப் பெண்ணின் தந்தை கோட்டயம் போலீஸில் புகார் கொடுத்தார். விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்குள் மந்திரவாதி சிவதாஸ் தப்பியோடிவிட்டார்.

போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திருவள்ளா பகுதியில் அவரைக் கைது செய்தனர். அவருடன், அந்தப் பெண்ணின் கணவர் அகில் தாஸ் (26), அகில் தாஸின் தந்தை தாஸ் (54) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in