

ராய்ப்பூர்: கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் 3 நாட்களாக உடலை அடக்கம் செய்ய முடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டம், கோடிகுர்ஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் மனிஷ் நிஷாத் (50). உடல்நலம் பாதிக்கப்பட்ட மனிஷ், ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மனிஷ் உடலை கிராமத்துக்கு கொண்டு வந்து, தங்கள் சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால், மனிஷ் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர் என்பதால், அவரது உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சராமா கிராமத்தில் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். அங்கும் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 3 நாட்களுக்கு கிராமம் கிராமமாக உடலை எடுத்துக் சென்று அடக்கம் செய்ய முடியாமல் குடும்பத்தினர் தவிக்கின்றனர். இதையடுத்து மனிஷ் உடல் மீண்டும் கோடிகுர்ஸ் மருத்துமவனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் கிறிஸ்தவர்கள் பலர் கோடிகுர்ஸ் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சராமாவில் உள்ள அனுகிரா பிரார்த்தனை கூடத்தின் பாஸ்டர் மோகன் குவல் கூறும்போது, ‘‘மனிஷ் உடலை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும். அதை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.
பஞ்சாயத்து உறுப்பினர் தேவேந்திர டெகம் கூறுகையில், ‘‘கோடிகுர்ஸ் கிராம மக்கள் பாரம்பரியத்தை கண்டிப்பாக பின்பற்றுபவர்கள். உடலை அடக்கம் செய்வதற்கு அவர்களுக்கு என்று தனி பழக்கம் இருக்கிறது. உடலை அடக்கம் செய்ய வேண்டுமானால், அவர்களுடைய முறைப்படிதான் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் உடலை வேறு எங்காவது கொண்டு செல்ல வேண்டும்’’ என்று கிராமத்தினருக்கு ஆதரவாக கூறினார்.
இதற்கு முன்பும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் உட்பட பல இடங்களில் மதம் தொடர்பான பிரச்சினையில் பல உடல்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.